நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு


நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 5 Nov 2024 6:41 PM IST (Updated: 5 Nov 2024 8:04 PM IST)
t-max-icont-min-icon

சர்ச்சை பேச்சு தொடர்பாக நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டு பேசும்போது, 300 வருடங்களுக்கு முன்பு ஒரு ராஜாவுக்கு, அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்களை, தெலுங்கு பேசியவர்களை எல்லாம் தமிழர்கள் இனம் என்று சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு இங்கு யார் இருக்கிறார்கள்? அதனால்தான் இங்கு தமிழர்கள் முன்னேற்ற கழகம் என்று வைக்க முடியவில்லை'', என்று குறிப்பிட்டார்.

கஸ்தூரியின் இந்த கருத்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் அவரின் பேச்சுக்கு கண்டனங்களும் வலுத்தன. இதையடுத்து தெலுங்கு மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து நடிகை கஸ்தூரி இன்று அறிக்கை வெளியிட்டார். அதில் தெலுங்கு மக்களை புண்படுத்துவது எனது நோக்கம் இல்லை, கவனக்குறைவாக வந்த வார்த்தைகள் யாரையும் காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன். தெலுங்கு மக்கள் குறித்து நான் பேசிய வார்த்தைகள் அனைத்தையும் திரும்பப் பெறுகிறேன் என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரத்தை தூண்டுதல், மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை உருவாக்குதல், பொது அமைதியை கெடுக்கும் தவறான தகவல்களை பரப்புதல் மற்றும் பகைமை உண்டாக்கும் பேச்சு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கஸ்தூரி மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு தரப்பில் இருந்து காவல்துறையில் புகாரளிக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story