நடிகை மனோரமாவின் மகன் பூபதி காலமானார்

தியாகராய நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்த பூபதி (வயது 70) மூச்சு திணறல் காரணமாக இன்று காலை 10:15 மணியளவில் காலமானார்.
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மனோரமா. குணச்சித்திரம், காமெடி என பல்வேறு கதாப்பாத்திரங்களில் 1,000 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்தார். கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மனோரமா மறைந்தார்.
மனோரமாவின் ஒரே மகன் பூபதி . அவரைத் திரையுலகில் அறிமுகப்படுத்தி பிரபலமாக்க மனோரமா பல முயற்சிகள் எடுத்தார். ஆனால் அவை தோல்வியில் முடிந்தன. இருப்பினும், நடிகர் விசுவின் 'குடும்பம் ஒரு கதம்பம்' படத்தில் அறிமுகமான பூபதி அதன் பின்னர் சில படங்களில் நடித்தார். எனினும், அவரால் திரையுலகில் ஜொலிக்க முடியவில்லை.
சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்த பூபதி(வயது 70) மூச்சு திணறல் காரணமாக இன்று காலை 10:15 மணியளவில் காலமானார். அவரது மரணத்துக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பூபதிக்கு ராஜராஜன் என மகனும், அபிராமி, மீனாட்சி என்ற மகள்களும் உள்ளனர். பூபதி உடலுக்கு நாளை இறுதி சடங்கு நடக்கிறது.






