மதுரையில் வேளாண் பல்கலைக் கழகம்: சொன்னீங்களே செஞ்சீங்களா - நயினார் நாகேந்திரன்

மதுரையின் வளர்ச்சியைக் காவு வாங்கியது திமுக அரசின் திறனற்ற நிர்வாகமே என்பதை மக்கள் நன்கறிவர் என தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தென் தமிழகத்திற்கென மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று 2021 தேர்தல் வாக்குறுதி எண் 54-ல் சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்-அமைச்சரே?
வளர்ச்சி அரசியலை முன்னெடுத்துள்ளதாக மேடைதோறும் பெருமை பேசும் நீங்கள் மதுரைக்காக முன்னெடுத்தது என்ன? கொடுத்த வாக்குறுதிப்படி வேளாண் பல்கலைக்கழகம் அமைக்காதது, மாற்றாந்தாய் மனப்பான்மையில் தப்பும் தவறுமாகத் திட்ட அறிக்கை தயாரித்து மெட்ரோ திட்டத்தைத் தாமதமாக்கியது என மதுரையின் வளர்ச்சியைக் காவு வாங்கியது திமுக அரசின் திறனற்ற நிர்வாகமே என்பதை மதுரை மக்கள் நன்கறிவர்.
திமுக அமைச்சர்களின் கோஷ்டி சண்டையில் இந்தியாவிலேயே அசுத்தமான நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடிக்குமளவிற்கு மதுரையை நாறடித்தது போதாதென்று, ரூ.150 கோடி வரை மாநகராட்சி வரியில் முறைகேடு செய்து மதுரையின் வளத்தையும் சுரண்டிய திமுக அரசை மதுரை மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்.
கொடுத்த வாக்குறுதிகளையும் மக்களின் வளர்ச்சியையும் மறந்து, சொந்த வாரிசுகளின் வளர்ச்சி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் திமுக அரசை வரும் சட்டமன்றத் தேர்தலில் மதுரை மக்கள் தூக்கியெறிவார்கள்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






