கல்லறை திருநாள்... முன்னோர்களின் கல்லறைகளில் பிரார்த்தனை செய்த கிறிஸ்தவர்கள்


கல்லறை திருநாள்... முன்னோர்களின் கல்லறைகளில் பிரார்த்தனை செய்த கிறிஸ்தவர்கள்
x

முன்னோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி அவர்களின் ஆன்மா இளப்பாற வழிபாடு செய்தனர்.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் நவம்பர் 2-ந் தேதி கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர்கள் மற்றும் உறவினர்களின் கல்லறைகளுக்குச் சென்று, அவர்களை நினைவுகூர்ந்து, அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வது வழக்கம். தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

அவ்வகையில் இன்று கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கல்லறைத் தோட்டங்களுக்கு சென்ற கிறிஸ்தவர்கள், தங்கள் முன்னோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து, மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். சிலர் இறந்த தங்கள் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படைத்தும் பிரார்த்தனை செய்தனர். பின்னர் ஏழை, எளிய மக்களுக்கு உணவுகளை வழங்கினர். முன்னோர்களின் ஆன்மா இளைப்பாறுதலுக்காக திருப்பலி நடைபெற்றது.

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தலம் கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாள் வழிபாடு நடந்தது. இந்த வழிபாட்டையொட்டி ஏராளமான கிறிஸ்துவர்கள் தங்களின் முன்னோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி சாம்பிராணி தூபம் போட்டு அவர்களுக்கு பிடித்தமான பொருட்கள் வைத்து அவர்களின் ஆன்மா இளப்பாற வழிபாடு செய்தனர். பங்கு தந்தை ரமேஷ் அடிகளார் ஒவ்வொரு கல்லறைக்கும் சென்று பிரார்த்தனை செய்து தூபமிட்டு அர்ச்சித்தார்.

பூண்டி மாதா பேராலயம்

உயிர் நீத்தவர்கள் ஆன்மா இளைப்பாற்றலுக்காக பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. திருப்பலி முடிவடைந்ததும் பூண்டி மாதா பேராலயத்தின் பங்குத்தந்தையாக பணியாற்றி மறைந்து, பூண்டி மாதா பேராலயத்தின் உள்ளேயே அடக்கம் செய்யப்பட்டு உள்ள, புனிதர் பட்டத்தை எதிர்நோக்கியுள்ள அருட் தந்தை லூர்து சேவியர் கல்லறையை பேராலய அதிபர் சாம்சன் புனிதம் செய்தார்.

கல்லறை திருநாளை முன்னிட்டு அருட்தந்தை லூர்து சேவியர் கல்லறையானது மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. அவரது கல்லறை புனிதம் செய்யப்பட்டதற்கு பிறகு, பூண்டி மாதா பேராலயத்தில் பணியாற்றிய அருட்தந்தை ராயப்பர் கல்லறையை (பூண்டி மாதா பூங்காவில் உள்ளது) அருட்தந்தையர்கள் புனிதம் செய்து வைத்தனர்.

இந்த நிகழ்வில் பூண்டி மாதா பேராலய அதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர்கள் செல்வகுமார், லாரன்ஸ் ஆன்மீக தந்தை ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story