அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு: முதலிடம் பிடித்த வீரருக்கு கார் பரிசு

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது.
தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகை தினத்தன்று நடைபெறுகிறது. மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்த போட்டிகள் உலக அளவில் சிறப்பு பெற்றவை.
அதன்படி பொங்கல் பண்டிகை தினமான இன்று (15-ந் தேதி) அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. போட்டியை பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 1,100 காளைகளும், சுமார் 600 வீரர்களும் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் , அவனியாபுரத்தில் இன்று காலை தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை நிறைவடைந்தது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 22 காளைகளை அடக்கிய வலையங்குளத்தை சேர்ந்த பாலமுருகன் முதல் பரிசை தட்டிச்சென்றார். அவருக்கு ரூ. 8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டது. அவருக்கு அடுத்தபடியாக 17 காளைகளை அடக்கிய அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்தி 2வது இடத்தையும், 16 காளைகளை அடக்கிய அவனியாபுரத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் 3வது இடத்தையும் பிடித்தனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக விருமாண்டி சகோதரர்களின் காளை முத்து கருப்பன் தேர்வு செய்யப்பட்டது. காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசு வழங்கப்பட்டது.






