கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயிண்ட் - முத்தரசன் கண்டனம்


கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயிண்ட் -  முத்தரசன் கண்டனம்
x
தினத்தந்தி 15 July 2025 2:57 PM IST (Updated: 15 July 2025 5:44 PM IST)
t-max-icont-min-icon

கறுப்பு பெயிண்ட் வீசிய குற்றச் செயலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்

சென்னை ,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

தமிழக மக்களின் பேராதரவையும், பெருமதிப்பையும் பெற்றுத் திகழும் கருணாநிதி சிலை, அண்மையில் சேலம் மாநகரில் அண்ணா பூங்காவில் திறந்து வைக்கப்பட்டது. இந்த வெண்கலச் சிலை மீது கறுப்பு பெயிண்ட் வீசி, அவமதிக்கும் ஈனத்தனமான செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக அரசியலை காவிமயமாக்கி வரும் சங் பரிவார் கும்பல் இத்தகைய இழி செயல்களில் ஈடுபட்டு வருவதை இதுவரை நடந்த சம்பவங்களின் விசாரணை நடவடிக்கைகள் உறுதி செய்துள்ளன.

உலகப் பொதுமறையாம் திருக்குறள் தந்த வள்ளுவர் சிலைக்கு காவி பூசி, பூணூல் போட்டதும், பெரியார், அண்ணல் அம்பேத்கர், எம்ஜிஆர் என மக்கள் மனதில் உயர்ந்து நிற்கும் தலைவர்களின் சிலைகளை உடைத்தும், வண்ணம் பூசியும், சுய மகிழ்வு கொள்ளும் கூட்டம் இப்போது கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயிண்ட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இது தமிழ்நாட்டை பெரும் அமளிக் காடாக்கி, அரசியல் ஆதாயம் தேடும் மலிவான அரசியல் சதியின் ஒரு வடிவமாகும். கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயிண்ட் வீசிய குற்றச் செயலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க விடாமல் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. என தெரிவித்துள்ளார் .

1 More update

Next Story