தேர்தல் ஆயத்தப் பணிகளுக்கு ஒன்றான 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி மாநாடு - நயினார் நாகேந்திரன்

2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் மிகவும் வீரியத்துடன் செயல்பட வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழகத்தில் 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதற்கான ஆயத்தப் பணிகளில் ஒன்றான 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி மாநாடு, (BLA-2) பயிலரங்கக் கூட்டம் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(SIR) பற்றிய பயிலரங்கக் கூட்டம் நேற்றைய தினம் மாநிலம் முழுவதும் தொடங்கியுள்ளது. டிசம்பர் 13,14,15 மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கூட்டங்கள், ஒரே சமயத்தில் நடைபெறுகிறது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிகழ்வுகள் அனைத்தையும் வெற்றிகரமாக வடிவமைத்து அதை செயல்படுத்தி வரும் தேசிய எஸ்.ஐ.ஆர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கமிட்டி உறுப்பினர் மற்றும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை , மாநில துணைத் தலைவர் மற்றும் (BLA-2) மாநில அமைப்பாளர் நாகராஜன், மாநில துணைத் தலைவர் மற்றும் பூத் கமிட்டி மாநில அமைப்பாளர் ஜெயபிரகாஷுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இது நம் தமிழக பாஜகவிற்கும் நம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் கிடைத்த வெற்றிக்கான முதல் படி . அனைத்து (BLA-2) பூத் முகவர்களும் இந்த பயிலரங்கக் கூட்டத்தை முழுவதுமாக பயன்படுத்திக்கொண்டு 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் மிகவும் வீரியத்துடன் செயல்பட வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






