புலிகளைப் பாதுகாப்பதன் வழியே, நம் காடுகளின் ஆன்மாவை பாதுகாக்கிறோம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


புலிகளைப் பாதுகாப்பதன் வழியே, நம் காடுகளின் ஆன்மாவை பாதுகாக்கிறோம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

உலகப் புலிகள் நாளில் தமிழ்நாடு பெருமிதத்துடன் முழங்குகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

இன்று, ஜூலை 29, சர்வதேச புலிகள் தினம் (World tiger day). உலகம் முழுவதும் உள்ள காடுகளில் கம்பீரமாக வலம் வரும் புலிகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தவும், அவற்றின் வாழ்விடங்களைப் பேணவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.இந்தியாவின் புலிகள் பாதுகாப்பில் தமிழ்நாடு ஒரு முக்கியப் பங்காற்றுகிறது. நமது மாநிலத்தில் ஐந்து பெரிய புலிகள் காப்பகங்கள் உள்ளன.

*களக்காடு *முண்டந்துறை *ஆனைமலை *முதுமலை *சத்தியமங்கலம் இந்தக் காப்பகங்கள் இணைந்து 6,150 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டுள்ளன. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் சுமார் 264 புலிகள் உள்ளன.

இந்தநிலையில், உலகப் புலிகள் நாளையொட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியதாவது:-

உலகப் புலிகள் நாளில் தமிழ்நாடு பெருமிதத்துடன் முழங்குகிறது!

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத் தரவுகளின்படி, 306 புலிகளைக் கொண்டுள்ளது தமிழ்நாடு. இந்த வெற்றிக்குக் காரணம், கடினமான பகுதிகளில், முக்கியத்துவம் மிகுந்த புலிகளின் வாழிடங்களைப் பாதுகாக்கும் நமது வனத்துறைப் பணியாளர்களும், வேட்டைத் தடுப்பு அணியினரும்தான்.

வனங்களைப் பாதுகாக்கும் பணியினை மேம்படுத்திட, 1,947 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன, வனத்துறையினருக்கு நவீன உடைகள், தொழில்நுட்பக் கருவிகள் வழங்கப்படுகின்றன, கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அயல் - ஆக்கிரமிப்புத் தாவரங்களை அகற்றி, புலிகளின் வாழிடங்கள் மீளுருவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. காடுகளின் வளம் மேம்படுத்தப்படுகிறது. கானுயிர் மீதான குற்றங்கள் புரியும் கும்பல்களை அடக்க, தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டுப் பிரிவு (TNWFCCB) எனும் சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. புலிகளைப் பாதுகாப்பதன் வழியே, நம் காடுகளின் ஆன்மாவை நாம் பாதுகாக்கிறோம். என பதிவிட்டுள்ளார்.


1 More update

Next Story