பொங்கல் அன்று நடக்கவிருந்த சிஏ தேர்வு தேதி மாற்றம்; மதுரை எம்பி சு.வெங்கடேசன் கோரிக்கை ஏற்பு


பொங்கல் அன்று நடக்கவிருந்த சிஏ தேர்வு தேதி மாற்றம்; மதுரை எம்பி சு.வெங்கடேசன் கோரிக்கை ஏற்பு
x

ஜனவரி 15ஆம் தேதி நடைபெறவிருந்த சிஏ இண்டர்மீடியட் தேர்வு, ஜனவரி 19ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,

பொங்கல் பண்டிகை நாளில் இந்தியப் பட்டயக் கணக்காளர் கழகம் (ஐசிஏஐ) சார்பில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டது. இது தமிழக இளைஞர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளில் தேர்வுகளை நடத்துவதால் மாணவர்கள் கடும் சிரமங்களை சந்திப்பார்கள் என்பதுடன், தேர்வு தேதிகளை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், இந்தியப் பட்டயக் கணக்காளர் கழகத் தலைவர் சரண் ஜோத் சிங் நந்தாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், பொங்கல் பண்டிகை, திருவள்ளுவர் தினம் மற்றும் உழவர் திருநாள் ஆகிய நாட்களான ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இந்தியப் பட்டயக் கணக்காளர் கழகம் இடைநிலை (இண்டர்மீடியட்) மற்றும் இறுதித் தேர்வுகளை அறிவித்துள்ளது.

இது தேர்வர்களுக்கு கடுமையான சிரமங்களை ஏற்படுத்தும் என தன்னிடம் முறையீடுகள் வந்துள்ளதாகவும், எனவே பொங்கல் திருநாள் கொண்டாடப்படும் தேதிகளில் அறிவிக்கப்பட்ட தேர்வுகளை வேறு தேதிகளுக்கு மாற்றி அறிவிக்க வேண்டும்’ என்று தெரிவித்து இருந்தார்.இந்த நிலையில், ஜனவரி 15ஆம் தேதி நடைபெறவிருந்த சிஏ இண்டர்மீடியட் தேர்வு, ஜனவரி 19ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனவரி 15ஆம் தேதி மராட்டிய மாநகராட்சித் தேர்தல் நடைபெறவிருப்பதால் இந்த தேர்வு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

“பொங்கல் அன்று அறிவிக்கப்பட்டிருந்த சிஏ (இண்டர்) தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக இந்தியப் பட்டயக் கணக்காளர் கழகத்திற்கு டிசம்பர் 18ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தேன். இந்த நிலையில், ஜனவரி 15ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த தேர்வு ஜனவரி 19ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மாற்றியதற்கு வேறு காரணத்தை அவர்கள் கூறியுள்ளதன் மூலம் அவர்கள் ஆறுதல் அடைந்து கொள்ளட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story