நெருங்கும் சட்டமன்ற தேர்தல்: அரசியல் தலைவர்களுக்காக பல்வேறு வசதிகளுடன் தயாராகும் பிரசார வாகனங்கள்

சொகுசு வசதிகளுடன் கூடிய பிரசார வாகனங்கள் தயார் செய்யப்படுகின்றன.
சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் களம் காண்கின்றன. இதுதவிர த.வெ.க. மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் களம் காண உள்ளனர். எனவே இந்த தேர்தல் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.
தேர்தலின் போது அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார்கள். அரசியல் கட்சி தலைவர்களுக்காக விசேஷமாக வடிவமைக்கப்பட்ட பிரசார வாகனங்களை தயார் செய்வதில் கோவை முக்கிய இடம் பிடிக்கிறது.
இங்கு முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களுக்கு பல்வேறு வசதிகளுடன் கூடிய பிரசார வாகனங்கள் தயார் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போதும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இங்கு சொகுசு வசதிகளுடன் கூடிய பிரசார வாகனங்கள் தயார் செய்யப்படுகின்றன.
இந்த வாகனங்களில் சுழலும் இருக்கைகள், வேனின் மேற்கூரை வழியாக தலைவர்கள் அமர்ந்தபடி பேச வசதியாக ஹைட்ராலிக் லிப்ட் வசதி பொருத்தப்படுகிறது. வேனை சுற்றிலும் எல்.இ.டி. விளக்குகள், தலைவர்கள் பேசுவதை தொண்டர்கள் கேட்கும் வகையில் துல்லிய ஒலி அமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.
மேலும் முக்கிய தலைவர்கள் பிரசாரத்தின் போது வாகனத்தில் பாதுகாவலர்கள் நின்று கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. இந்த வாகனங்களில் தலைவர்கள் ஓய்வெடுக்க சிறிய அறை, பயோ அல்லது எலக்ட்ரிக் கழிப்பறை வசதி, கண்காணிப்பு கேமராக்கள் என ஏராளமான வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது.
இந்த ஆண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறுவதை பதிவு செய்ய கணினி வசதி, பிரிண்டர், முக்கிய தலைவர்களுடன் அமர்ந்து பேச சோபாக்கள் கொண்ட சிறிய அறை உள்ளிட்டவை ஏற்படுத்தப்படுகின்றன. இதனால் தங்களின் கட்சி தலைவர்களுக்காக கோவையில் பிரசார வாகனங்களை வடிவமைக்க அரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.






