புற்றுநோய் பரிசோதனை வாகன திட்டம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு


புற்றுநோய் பரிசோதனை வாகன திட்டம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
x

மக்களின் நல்வாழ்விற்காக தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை வரவேற்பதாக வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“நடப்பு நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்ட நேரத்தில், மூத்த குடிமக்கள் நலன் பேண அன்புச் சோலை திட்டம் அறிவிக்கப்பட்டது. மூத்த குடிமக்களுக்கு நம்பிக்கையூட்டும் அன்பு சோலை திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் முதல் கட்டமாக 1,250 முதியோர்கள் பயன்பெறும் வகையில் திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

இதே போல, கடந்த ஆகஸ்டு மாதம் தொடங்கிய நலன் காக்கும் திட்டத்தில் வாரம் தோறும் நடத்தப்பட்ட 523 முகாம்களில் 8 லட்சத்து 21 ஆயிரம் பேர் இதயம், நரம்பியல், நுரையீரல் உள்ளிட்ட முக்கிய பரிசோதனைகள் செய்து கொண்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக புற்று நோய்த் தடுப்புக்கான முயற்சியில் 14 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு தடுப்பூசியும், 38 மாவட்டங்களிலும் நடமாடும் வாகன புற்றுநோய் பரிசோதனை மையங்கள் விரைவில் செயல்படும் என அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த திசை வழியில் புற்று நோய் சிகிச்சை நிறைவு பெற்று, வாழ்வின் இறுதிக் காலத்தை கடந்து செல்ல வேண்டிய நோயாளர்கள் நிறைவு காலம் வரை மருத்துவக் கண்காணிப்பில் இருக்கும் முறையில் சிறப்பு வார்டுகள் தொடங்க வேண்டியதும் அவசியமாகும் என்பதை அரசுக்கு தெரிவித்து, மக்களின் நல்வாழ்விற்காக தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story