கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது - அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

கட்டுமானங்களை அறநிலையத்துறை சட்டப்படி, பக்தர்கள் வசதிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்களின் நிதியில் இருந்து வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என அனைத்து கோவில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப இந்து சமய அறநிலையத்துறை கமிஷனருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஏ.பி.பழனி என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னை கந்தகோட்டத்தில் உள்ள முத்துகுமார சாமி கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து வழிபாடு செய்கின்றனர். இதனால் இந்த கோவிலுக்கு மிகப்பெரிய தொகை உண்டியல் வருமானமாக கிடைக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த சாமியின் மீதுள்ள பக்தியில் ஏராளமானோர் தங்களது சொத்துகளை எழுதி கொடுத்துள்ளனர்.

அந்த வகையில், சென்னை ஜார்ஜ் டவுண், நயனியப்ப நாயக்கன்தெரு, சவுகார்பேட்டை அண்ணாபிள்ளை தெரு, திருபள்ளித்தெரு, பெரியமேடு கற்பூரமுதலி தெரு ஆகிய இடங்களில் உள்ள கோவிலுக்கு நன்கொடையாக எழுதி வைக்கப்பட்ட சொத்துகளை, வணிக வளாகமாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் கட்டி வருகின்றனர்.

இதற்காக கோவில் பெயரில் வங்கிகளில் உள்ள நிரந்த வைப்புத்தொகை, சேமிப்பு கணக்கில் போடப்பட்டுள்ள தொகைகளை எடுத்து செலவு செய்ய உள்ளனர். கோவிலுக்கு தானமாக கொடுக்கப்பட்ட நிலத்தில், இதுபோல வணிக வளாகங்கள், குடியிருப்புகளை கட்டக்கூடாது என்று ஐகோர்ட்டு தடை விதித்து இருப்பது அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தெரியும். மேலும், கோவிலின் வருமானம், உபரி வருமானம் ஆகியவற்றை மத நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது. இதையெல்லாம் தெரிந்து இருந்தும், கோவில் நிலத்தில் கோவிலின் உபரி நிதியை பயன்படுத்தி வணிக வளாகங்களையும், குடியிருப்புகளையும் கட்ட திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கனவே, இந்த கோவில் சொத்துகளில் உள்ள வாடகைதாரர்கள் வாடகை தொகையை செலுத்தாமல், பாக்கி வைத்துள்ளனர். கோவில் சொத்துகளுக்கு தாங்களே உரிமையாளர்கள் என்றும் உரிமை கோருகின்றனர்.

இதனால், கோவில் உபரி நிதியை வணிக வளாகங்கள், குடியிருப்புகளை கட்ட பயன்படுத்தக் கூடாது என்று கடந்த ஆகஸ்ட் 4-ந்தேதி கோரிக்கை மனு அனுப்பியும், எந்த பதிலும் இல்லை. எனவே, கோவிலுக்கு தானமாக கொடுத்த சொத்துகளில், கோவிலின் உபரி நிதியை பயன்படுத்தி கட்டுமானங்களை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் ஆர்.சிங்காரவேலன் ஆஜராகி வாதிட்டார். தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, கட்டுமானப் பணிகள் 80 சதவீதம் முடிந்து விட்ட நிலையில், இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. ரூ.7 கோடி செலவில் கட்டப்படும் கட்டிடங்கள் மூலம் மாதம் ரூ.7 லட்சம் வருமானமாக கிடைக்கும். இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது' என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கந்தக்கோட்டம் முத்துகுமாரசுவாமி கோவில் நிலத்தில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளை தொடரலாம். அதேநேரம், அந்த கட்டுமானங்களை அறநிலையத்துறை சட்டப்படி, பக்தர்கள் வசதிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

வணிக ரீதியில் பயன்படுத்தக் கூடாது. இந்த வழக்கிற்கு வருகிற நவம்பர் 22-ந்தேதிக்குள் தமிழ்நாடு அரசும், அறநிலையத்துறையும் பதில் அளிக்கவேண்டும். மேலும், கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என்று மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் சுற்றறிக்கை வெளியிடவேண்டும். தவறினால் அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com