கபடி வீரர்களுக்கு வாழ்த்து; நவீன பயற்சி கூடங்கள் அமைத்து உதவ வேண்டும் - மு.வீரபாண்டியன்

கண்ணகி நகர் பகுதியில் கபடி, அதெலடிக்ஸ் விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட ஏராளமான வீரர்கள் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“பஹ்ரைன் நாட்டின் ரிப்பா நகரில் கடந்த 19 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை தொடர் சுற்று கபடி போட்டியில் பங்கேற்றுக் கொண்ட விளையாட்டு வீரர்கள் திருவாரூரை சேர்ந்த அபினேஷ் மோகன் தாஸ், சென்னை பெருநகர் கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா ரமேஷ் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று, தமிழ்நாட்டுக்கு பெருமை தேடி தந்துள்ளனர். விளையாட்டு வீரர்கள் இருவருக்கும் தமிழ்நாடு அரசு தலா ரூ.25 லட்சம் ஊக்கத் தொகை வழங்கி, முதல்-அமைச்சர் நேரில் அழைத்து வாழ்த்து கூறியுள்ளார்.
அரசுப் பள்ளியில் பயின்று வரும் கார்த்திகா, மிகவும் எளிய குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர். தமிழ்நாட்டுக்காக விளையாடி இதுவரை 8 பதக்கங்களை வென்ற சிறப்புக்குரியவர். கபடி விளையாட்டில் தமிழ் சமூகத்திற்கு பெருமை தேடித்தந்த அபினேஷ், கார்த்திகா இருவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
கண்ணகி நகர் பகுதியில் கபடி, அதெலடிக்ஸ் விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட ஏராளமான இளைய தலைமுறை ஆண், பெண் விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.
வட சென்னை வியாசர்பாடி பகுதியில் கேரம், குத்து சண்டை, கால்பந்து போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட இளைஞர்களும், யுவதிகளும் இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், வீடும், மனையும் சொந்தமில்லாத, எளிய குடும்பங்களில் பிறந்த, சமூகத்தின் அடித்தட்டு பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் விருப்பப்பட்ட விளையாட்டுகளில் பயிற்சி பெற்று, திறனை வளர்த்துக் கொள்ள நவீன ஒருங்கிணைந்த பயிற்சிக் கூடங்கள் மற்றும் நவீன வசதிகள் கொண்ட விளையாட்டுத் திடல்கள் அமைத்துத் தருவதற்கு தமிழ்நாடு அரசு முன்னுரிமை வழங்கி நிறைவேற்ற வேண்டும்.
தமிழ்நாடு அரசு இதுவரை, நான்காயிரத்து 617 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.152.22 கோடி ஊக்கத் தொகையும், விருதுகளும் வழங்கியுள்ளது. எனினும் தமிழ்நாடு முழுவதும் விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர், இளைஞர்களை கண்டறிந்து, அவர்களுக்கு போதுமான பயிற்சியளிக்க தமிழ்நாடு அரசின் விளையாட்டுத் துறை முனைப்புக் காட்டுவதோடு, ஒலிம்பிக் போன்ற உலக அரங்கில் போட்டியிடுவதற்கான நவீன விளையாட்டு கட்டமைப்புகள் குறித்தும் தமிழ்நாடு அரசு கூடுதலாக முன்முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது” என தெரிவித்துள்ளார்






