திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்


தினத்தந்தி 14 July 2025 5:47 AM IST (Updated: 14 July 2025 6:29 AM IST)
t-max-icont-min-icon

கும்பாபிஷேகத்தை பார்க்க ஏராளமான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் குவிந்துள்ளனர்.

மதுரை

திருப்பரங்குன்றம்,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை என்ற பெருமை திருப்பரங்குன்றத்துக்கு உண்டு. இந்த கோவிலில் ரூ.2 கோடியே 36 லட்சத்தில் திருப்பணிகள் நடந்தன. இதை தொடர்ந்து 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இதையொட்டி கோவில் வெளிப்பிரகாரமான வள்ளி தேவஸ்தான திருமண மண்டபம், சஷ்டி மண்டபங்களில் குண்டம் மற்றும் வேதிகை சார்ந்த 75 யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த 10-ந்தேதி முதல் தொடர்ந்து 4 நாட்களில் கோவில் சிவாச்சாரியார்கள் மூலமாக 7 கால யாகவேள்வி நடந்தது. மேலும் 7 பெண்கள் உள்பட 85 ஒதுவார் மூர்த்திகளால் மங்கள வாத்தியம், வேதபாராயணம், திருமுறை, தமிழ் வேதபாராயணம் நடந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை 8-ம் யாகசாலை பூஜை நடைபெற்றது. இதனையடுத்து மேள தாளங்கள் முழங்க, நாதஸ்வரம் ஒலிக்க யாகசாலையில் இருந்து தங்கம், வெள்ளி கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. முருகப்பெருமானின் தாய், தந்தையரான மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் அருள்பார்வையில் பரிவார மூர்த்திகள் மற்றும் கோவிலின் கம்பீரமான 7 நிலை கொண்ட 125 அடி உயரமுள்ள ராஜகோபுரம் மற்றும் கோவர்த்தனாம்பிகை விமானம், விநாயகர் விமானம், பசுபதி ஈசுவரர் விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தின்போது ராஜகோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என லட்சக்கணக்கான பக்தர்கள் கோஷம் எழுப்பினர். கோபுர கலசத்தில் ஊற்றப்பட்ட புனிதநீர் பின்னர் டிரோன் மூலம் பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது

இதேபோல் கோவிலின் கருவறையில் முருகப்பெருமான் திருக்கரத்தில் உள்ள தங்கவேலுக்கு மகா அபிஷேகம் நடபெற்றது. மேலும் கருவறையில் உள்ள துர்க்கை அம்பாள், கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய விக்ரகங்களுக்கும் மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. கும்பாபிஷேகத்தை பார்க்க தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் குவிந்துள்ளனர்.

1 More update

Next Story