தி.மு.க. அரசின் அலட்சியத்தால் பரம்பிக்குளம் - ஆழியாறு திட்ட பிரதானக் கால்வாயில் உடைப்பு: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

கோப்புப்படம்
பரம்பிக்குளம் - ஆழியாறு திட்ட பிரதானக் கால்வாயில் சேதமடைந்த பகுதிகளை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அணைகளின் வலிமை மற்றும் கட்டமைப்பை ஆய்வு செய்தல்; கசிவுகள், விரிசல்கள் போன்றவற்றை கண்டறிந்து சரிசெய்தல்; அணையில் சேரும் வண்டல் படிவுகளை முறையாக அகற்றுவது; புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அணைகளை மேம்படுத்துவது போன்றவற்றை மேற்கொண்டு அணைகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டியது மாநில அரசின் கடமை. ஆனால், இந்தக் கடமையைச் செய்ய தி.மு.க. அரசு தவறிவிட்டது. இதன் விளைவாக பரம்பிக்குளம் - ஆழியாறு பிரதானக் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டக் கால்வாயின் மொத்த தூரம் 146 கிலோ மீட்டர் என்றும், பாசனத்திற்காக தற்போது தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் கால்வாயின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்வதாகவும், இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அருகே 77-வது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வாலிபாளையத்தில் பிரதான கால்வாயின் கரை 15 அடி நீளத்திற்கு உடைந்ததன் காரணமாக அருகில் இருந்த தென்னந்தோப்பிற்குள் நீர் புகுந்து அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட தேங்காய்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. இது மட்டுமல்லாமல், உடைப்பு காரணமாக பெருக்கெடுத்தோடிய நீர் அருகிலுள்ள ஊர்களுக்குள், குறிப்பாக ஆதி திராவிடர் காலனிக்குள் புகுந்ததாகவும், அங்குள்ள மதுரை வீரன் கோவிலை சூழ்ந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அறுபது ஆண்டு பழமை வாய்ந்த இந்தக் கால்வாயின் பல இடங்கள் சேதமடைந்த நிலையில், இது குறித்து அரசு அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் -தெரிவிக்கின்றனர். பரம்பிக்குளம் ஆழியாறு திட்டக் கால்வாயில் தற்போது ஏற்பட்டுள்ள உடைப்பிற்கு முழுக் காரணம் பராமரிப்பின்மையே என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.
தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கால், அலட்சியத்தால், அக்கறையின்மையால், திறமையின்மையால் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், சேதமடைந்த பகுதிகளை உடனடியாக சீர் செய்யவும் முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






