குடியிருப்புகளில் மின் வாகன சார்ஜிங் வசதி கட்டாயம் - தமிழ்நாடு அரசு

கோப்புப்படம்
குடியிருப்பு மற்றும் வணிக இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் என விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
குடியிருப்பு மற்றும் வணிக இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் என விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.
இந்த புதிய விதிகளின்படி, எட்டு வீடுகளுக்கு மேலான அல்லது 750 சதுர மீட்டருக்கு அதிகமான பரப்பளவில் கட்டப்படும் புதிய குடியிருப்புகளில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் ஆக இருக்க வேண்டும். மேலும், 50 வீடுகளுக்கும் அதிகமான பெரிய குடியிருப்புகளாக இருந்தால், அங்கே வெளியில் இருந்து வருவோரும் பயன்படுத்தும் வகையில் பொதுவான ரீசார்ஜிங் வசதி ஏற்படுத்துவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குடியிருப்புகளைத் தொடர்ந்து, வணிக வளாகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிலும் மின் வாகன சார்ஜிங் வசதியை ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, 300 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களில் ரீசார்ஜிங் வசதி ஏற்படுத்துவது கட்டாயம். இந்த விதித்திருத்தங்கள், மாநிலத்தில் மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பதுடன், வாகன ஓட்டிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, எதிர்காலத்தில் மின் வாகனங்களின் விற்பனை மற்றும் பயன்பாட்டை கணிசமாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.






