ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலில்.. பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத லிங்கம் கொள்ளை

பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத லிங்கத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆயிரம் ஆண்டுகள் பழமையான விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் அதே பகுதியை சேர்ந்த கலியபெருமாள் என்பவர் தங்கி கோவிலை பராமரித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கலியபெருமாள், வழக்கம்போல் கோவிலை பராமரித்துவிட்டு கோவிலின் கருவறையை பூட்டிவிட்டு சாவியை தான் படுத்திருந்த தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டு தூங்கினார்.
இதைத்தொடர்ந்து, அவர் நேற்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் எழுந்து கோவிலின் கருவறையை திறப்பதற்காக சாவியை பார்த்தபோது, அதனை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அவர் கோவிலின் கருவறைக்கு சென்று பார்த்தபோது, கருவறை கதவின் பூட்டு திறந்து கிடந்தது. இதனால் மேலும் அதிர்ச்சிக்குள்ளான அவர் உள்ளே சென்று பார்த்தபோது, கருவறையில் இருந்த மரகத லிங்கம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து கலியபெருமாள் உடனடியாக ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஷ்வேஷ் பா.சாஸ்திரி, ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிசக்கரவர்த்தி, இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் சீமா வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. அப்போது மோப்பநாய் சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடங்கள் சேகரிக்கப்பட்டன.
இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மரகத லிங்கத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கொள்ளை போன மரகதலிங்கம் அரைஅடி உயரம் கொண்டது. இதன் மதிப்பு பலகோடி ரூபாய் இருக்கும் என கோவில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பழமையான மரகதலிங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






