திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு செல்ல அனைவருக்கும் அனுமதி; செல்போன் எண், ஆதார் கட்டாயம்...!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடு திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உள்ள மலை மீது அமைந்துள்ள தீபத்தூணில் இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை கடந்த 1ம் தேதி உத்தரவிட்டது. ஆனால், ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டும் கார்த்திகை தீபத்தினமான 3ம் தேதி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. அதற்கு மாறாக மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கூறி தீபம் ஏற்ற தமிழக அரசு மறுத்துள்ளது. தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை எதிர்த்து தமிழக அரசு மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறை தொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நடைபெற்ற நிலையில் வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், தீபத்தூண் பகுதிகளுக்கு பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் கடந்த 3ம் தேதி முதல் தடை விதித்தது.
இதனிடையே, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் நேற்று சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது தொடர்பாக பக்தர்கள், உள்ளூர் மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர். அதேவேளை, தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக இன்று மாலை திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி அமைப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், 19 நாட்கள் தடைக்குப்பின் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் இன்று முதல் அனுமதி வழங்கியுள்ளது. மலைக்கு செல்ல இன்று முதல் அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கோவிலுக்கு செல்பவர்கள், பக்தர்கள் தங்கள் ஆதார் எண், செல்போன் எண்ணை போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.






