'சென்னை ஒன்' செயலி மூலம் ரூ.1,000, ரூ.2000 மாதாந்திர மின்னணு பயண அட்டை பெறும் வசதி தொடக்கம்

'சென்னை ஒன்' செயலி மூலம் ரூ.1,000, ரூ.2000 மாதாந்திர மின்னணு பயண அட்டை பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் மற்றும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பு (கும்டா) இணைந்து வழங்கும் ‘சென்னை ஒன்' செயலி மூலம் விருப்பம்போல் பயணம் செய்யும் ஆயிரம் ரூபாய் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் மின்னணு மாதாந்திர பயண அட்டை பெறும் வசதியை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார்.
இதுவரை மாநகர போக்குவரத்துக் கழக முக்கிய பஸ் நிலையங்களில் மாதாந்திர பயணச்சீட்டு மையங்கள் வாயிலாக வழங்கப்பட்டு வந்த இந்த பயண அட்டைகளை 'சென்னை ஒன்' செயலி வாயிலாக எங்கும், எப்போதும் செல்போனில் எளிதாக பெறக்கூடிய மின்னணு பயண அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த மின்னணு பயண அட்டைகள் வாங்கிய நாளில் இருந்து தொடர்ந்து 30 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது முழுக்க, முழுக்க பணமில்லா பரிவர்த்தனை முறையில் இயங்குவதால் யு.பி.ஐ. அல்லது டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பயண அட்டையை பெறும் வசதி உள்ளது.






