கொடைக்கானலில் மீண்டும் உறைபனி - நடுங்க வைத்த குளிரால் சுற்றுலா பயணிகள் அவதி

இந்த மாத இறுதி வரை குளிர் மற்றும் உறைபனி நீடிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்கள் குளிர்காலமாகும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக குளிர் சீசன் தாமதமாக தொடங்கியது. இருப்பினும் உறைபனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னா் சில நாட்களாக மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பகலில் கடுமையான வெப்பம் நிலவியது. லேசான குளிருடன் இதமான வெயிலை சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர்.
இதற்கிடையே நேற்று காலை மீண்டும் உறைபனி நிலவியது. கொடைக்கானல் மலைப்பகுதியில் புல்வெளிகள் மற்றும் செடி, கொடிகள் மீது பனித்துளிகள் படர்ந்து கிடந்தன. புல்வெளிகள் மீது படர்ந்த பனித்துளிகள் வெள்ளை கம்பளத்தை விரித்ததுபோன்று காட்சியளித்தது. மேலும் அதிகாலை நேரத்தில் நட்சத்திர ஏரியில் 6 டிகிரி செல்சியசுக்கு குறைவாக வெப்பநிலை நிலவியது. இதனால் சூரியஒளி பட்டவுடன் பனித்துளிகள் ஆவியாக மேலே எழுந்த காட்சி ரம்மியமாக இருந்தது.
இதுதவிர கீழ்பூமி, ஜிம்கானா புல்வெளி, பிரையண்ட் பூங்கா, பாம்பார்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களில் உறைபனி படிந்து காணப்பட்டது. பின்னர் காலையில் கடுமையான வெப்பம் நிலவியது. தொடர்ந்து மீண்டும் நண்பகலில் மேகங்கள் தரையிறங்கி இதமான சூழல் நிலவியது. அத்துடன் கடும்குளிர் நடுங்க வைத்ததால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்தனர். நாளுக்குநாள் அதிகரித்து வரும் குளிர் மற்றும் உறைபனி இந்த மாத இறுதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.






