குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பதவியை நிரப்ப அரசுக்கு அவகாசம் - ஐகோர்ட்டு உத்தரவு


குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பதவியை நிரப்ப அரசுக்கு அவகாசம் - ஐகோர்ட்டு உத்தரவு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 25 Feb 2025 2:45 AM IST (Updated: 25 Feb 2025 12:32 PM IST)
t-max-icont-min-icon

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்கள் பதவிகளை நிரப்ப 3 மாதம் அவகாசம் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சிறார் நீதிச் சட்டம் உள்ளிட்ட குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை தீவிரமாக அமல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் அனைத்து மாநில ஐகோர்ட்டுகளும் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில் சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ''தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்கள் பதவிகள் ஒன்றரை ஆண்டுகளாக காலியாக உள்ளது. இது கோர்ட்டு அவமதிப்பு செயல் ஆகும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தற்போது அதிகரித்து வரக்கூடிய நிலையில், சிறார் நீதி சட்டம் உள்ளிட்ட சிறார்கள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்துவதை யார் கண்காணிப்பார்?

ஆணையம் இல்லாமல் குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்பிற்கு என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்? ஆணையம் அமைப்பதற்கு கால வரம்பை நிர்ணயிக்க வேண்டும். தலைவர், உறுப்பினர்கள் பதவிகளுக்கு தகுதியான நபரை நியமிக்க வேண்டும். இவர்களை தேர்வு செய்யும் நடவடிக்கையை எப்போது முடிக்கவேண்டும்'' என்று சரமாரியாக அரசுக்கு கேள்விகளை எழுப்பினர்.

காணொலி காட்சி வாயிலாக ஐகோர்ட்டில் ஆஜராகி இருந்த சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், "ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கு காரணமாக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர், உறுப்பினர் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டது. தற்போது அந்த வழக்கு முடிந்து விட்டதால், இந்த பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.

இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசி நாள் வருகிற மார்ச் 20-ந்தேதி ஆகும். இந்த விண்ணப்பத்தை அமைச்சர் தலைமையிலான குழு ஆய்வு செய்து, குழந்தைகள் நல ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்யும். பின் போலீஸ் சரிபார்ப்பு விசாரணை உள்ளிட்ட நடைமுறைகள் முடிக்க 3 மாத கால அவகாசம் வேண்டும்'' என்று கூறினார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், "3 மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த பதவிகளை நிரப்பிய பின்னர் வருகிற ஜூன் 20-ந்தேதி அறிக்கையை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்" என்று உத்தரவிட்டனர்.


Next Story