‘சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை' - சரத்குமார் பேட்டி


‘சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை - சரத்குமார் பேட்டி
x

ஆட்சி மாற்றத்திற்காக பிரசாரம் செய்ய இருப்பதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் இன்று வருகை தந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் சரத்குமார் பேசியதாவது;-

“தமிழகத்தில் 90 சதவீதம் மத்திய அரசின் திட்டங்களே செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், மத்திய அரசின் திட்டங்களுக்கு தி.மு.க. தனது பெயரை வைத்துக்கொள்கிறது. மதச்சார்பின்மை குறித்து தி.மு.க. பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும். தீப தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது அனைவரின் எண்ணமாக உள்ளது. தீபத் தூண் விவகாரத்தில் அரசு மாறி மாறி பேசிவருகிறது.

தமிழக வெற்றிக் கழகம் என்று முழுமையாக சொன்னால் எனக்கு தெரியவில்லை. த.வெ.க., இ.வெ.க., மு.வெ.க. என்று சொன்னால்தான் தெரிகிறது. அரசியல் கட்சி ஆரம்பித்தால் தேர்தல் பணி தொடங்குவது அவர்களது வேலை. அதனை அவர்கள் தொடங்கியுள்ளனர். விஜயை பிரமாண்டமாக காட்டி அவரது கட்சி பெரிய கட்சியாக மக்கள் மத்தியில் காட்டப்பட்டு வருகிறது.

உலகத்தில் மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க. உள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க.தான் பெரிய கட்சி. 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடவில்லை. என்னுடன் இருப்பவர்களை போட்டியிடவைத்து வெற்றி பெறச் செய்து சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் பயணிக்கிறேன்.

ஜனவரி மாதம் கூட்டணி நிர்ணயிக்கப்பட்ட பின்னர் முழுவதுமாக இறங்கி தேர்தல் பணியாற்ற தயாராகி வருகிறேன். நான் சட்டமன்றத் தேர்தலில் எங்கும் போட்டியிடவில்லை. எனக்கு வாய்ப்பு கொடுத்தாலும் பிறருக்காக, ஆட்சி மாற்றத்துக்காக பிரசாரம் செய்வேன்.”

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story