மாற்றம் வந்து தமிழ்நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லது நடந்தால் தேமுதிக வரவேற்கும் - பிரேமலதா விஜயகாந்த்

கோப்புப்படம்
தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி தான் நிச்சயமாக ஆட்சி அமைக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
புத்தாண்டு தினத்தையொட்டி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார். தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பிரேமலதா விஜயகாந்திடம் வாழ்த்து பெற்றுச் சென்றனர். அப்போது, தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர், பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் மக்களுக்கு தேமுதிக சார்பில் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஜனவரி 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கடலூரில் நடைபெறும் மாநாட்டை மகத்தானதாக மாற்றித் தர வேண்டும் என தேமுதிக தொண்டர்களையும், பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறேன். மாநாட்டின் வெற்றி உங்கள் ஒவ்வொருவரின் வெற்றி.
மத்திய உள்துறை மந்திரி வருகைக்கு எங்களுக்கு எந்த அழைப்பும் இல்லை. கூட்டணி குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக யாரும் எங்களிடம் பேசவும் இல்லை. யாரும் எங்களை அழைக்கவும் இல்லை. அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற பெயரையும் இணைக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள இளைஞர்களும் போதை கலாசாரத்தில் சிக்கித் தவிக்கிறார்கள். அண்மையில் திருவள்ளூரில் வடமாநில இளைஞரை 4 பேர் சேர்ந்து வெட்டினார்கள். போதைக்கு அடிமையானவர்கள் தங்கள் நிலைமையை மறந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். தமிழக அரசும், முதல்-அமைச்சரும் இதற்கு ஒரு கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு போதை கலாசாரத்தை நிச்சயமாக அகற்ற வேண்டும்.
சமூகநல பணியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், செவிலியர்கள், இடைநிலைஆசிரியர்கள் போராட்டம் என சென்னை மாநகரமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும்.
மாற்றம் ஒன்று தான் மாறாதது. எனவே, ஒரு மாற்றம் வந்து அதன் மூலம் தமிழ்நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது நடந்தால் தேமுதிக நிச்சயமாக வரவேற்கும். 2026 சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக கூட்டணி மந்திரி சபை அமைவதற்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. மாற்றங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
எனவே, அந்த மாற்றமும் நிச்சயமாக தமிழக மக்களுக்கு பயனளிக்கக்கூடியதாக இருக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி தான் இந்த முறை நிச்சயமாக ஆட்சி அமைக்கும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.






