தூத்துக்குடியில் அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ் திட்டம்: கலெக்டர் தலைமையில் ஆலோசனை

ஐஐடி மெட்ராஸ் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள 3 முக்கிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இந்திய நாட்டின் தலை சிறந்த கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி சென்னை கல்வி நிறுவனத்தின் அனைவருக்கும் ஐ.ஐ.டி மெட்ராஸ் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள மூன்று முக்கிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பள்ளி கல்வித்துறை உயர் அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அனைவருக்கும் ஐ.ஐ.டி மெட்ராஸ் திட்டத் தலைவரும், ஐ.ஐ.டி மெட்ராஸ் சமூக முன்னெடுப்புகள் தலைவர் ஹரிகிருஷ்ணன் கலந்து கொண்டு இந்த திட்டம் குறித்து விளக்கினார்.
இந்த திட்டத்தின் மூலம் 12-ம் வகுப்பு பயிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் ஜே.இ.இ நுழைவு தேர்வு இல்லாமல் ஐ.ஐ.டி.-ல் உருவாக்கப்பட்டுள்ள இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு படிப்பது குறித்தும், ஐ.ஐ.டி. சென்னை மூலம் வழங்கப்படும் AI சான்றிதழ் படிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. 12-ம் வகுப்புக்குப் பிறகே அல்லாமல், 11ம் வகுப்பு முடிந்ததும் இத்திட்டத்தில் சேரமுடியும்.
இதற்கு வயது வரம்பும் இல்லை. பதிவு செய்யும் மாணவர்கள், ஐ.ஐ.டி. மெட்ராஸ் வழங்கும் 4 வார ஆன்லைன் பயிற்சியை பூர்த்தி செய்து, தேர்வில் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெறுபவர்கள் Data Science மற்றும் Electronic Systems ஆகிய தொழில்நுட்ப துறைகளில் B.S. பட்டப்படிப்பை தொடங்கலாம்.
மற்ற கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும், வேலை பார்க்கும் நபர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் தகவலுக்கு study.iitm.ac.in/ds மற்றும் study.iitm.ac.in/es என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் 350க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஐ.ஐ.டி. சென்னையில் மேற்படிப்பு பயில்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் பள்ளி கல்வி துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.






