தமிழக அரசின் காற்றாலை மின்சார கொள்கைக்கு தொழில்துறையினர் வரவேற்பு

தமிழக அரசின் காற்றாலை மின்சார கொள்கைக்கு தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை,
பழைய காற்றாலைகளுக்கு மின்சார சேமிப்பு வசதியை நீட்டிக்கவும், தகுதியுள்ள காற்றாலைகளின் செயல்பாட்டு காலத்தை 40 ஆண்டுகள் வரை அதிகரிக்கவும் தமிழ்நாடு அரசிடம் தொழில்துறை தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது.
இந்தநிலையில் புதிய காற்றாலை மின்சார கொள்கையை தமிழக அரசு வகுத்துள்ளது. இதனால் தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தென் இந்திய நூற்பாலைகள் சங்கம் (சைமா) வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-
புதிய அரசாணை மூலம் செய்யப்பட்ட காற்றாலை கொள்கை திருத்தங்களை வரவேற்கிறோம். சரியான நேரத்தில் மேற்கொண்ட முற்போக்கான நடவடிக்கைகளுக்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், மின்வாரிய அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
வருடாந்திர காற்றாலை மின்சார வைப்பு திட்டம், மெகாவாட் ஒன்றுக்கு 5 ஆண்டுகளுக்கு ரூ.30 லட்சத்தில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் ஆக கட்டுமான செலவு கட்டணத்தை குறைத்து இருப்பது பழைய காற்றாலைகளுக்கு எளியமுறையில் காலக்கெடுவை நீட்டித்து இருப்பது போன்ற திட்டங்களை வரவேற்கிறோம்.
புதிய காற்றாலை கொள்கையால், ஜவுளி உற்பத்தியாளர்கள் பசுமை ஆற்றலை அதிக அளவில் பயன்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், சமீபத்திய உலகளாவிய நிகழ்வுகளால் தொழில்துறைக்கு ஏற்பட்டுள்ள அழுத்தத்தையும் குறைக்கும். இந்தக் கொள்கை மாற்றங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டில் மாநிலத்தின் தலைமைத்துவத்தை வலுப்படுத்துவதோடு, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் ஜவுளித் தொழிலின் போட்டித்தன்மையை வலுப்படுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






