ஜல்லிக்கட்டு வர்ணனை; சுற்றுக்கு ஒருவரை நியமிக்க வேண்டும் - மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு


ஜல்லிக்கட்டு வர்ணனை; சுற்றுக்கு ஒருவரை நியமிக்க வேண்டும் - மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு
x

மதுரையைச் சேர்ந்த வர்ணனையாளர்களையும் வர்ணனையில் ஈடுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை,

மதுரை அவனியாபுரம், பலாமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஒவ்வொரு சுற்று வாரியாக வர்ணனையாளர்களை நியமிக்க வேண்டும் எனக் கோரி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நலச்சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளின் வர்ணனையாளர்கள் சில காளைகளின் பெயர்களை அறிவிப்பதற்காக மாட்டின் உரிமையாளர்களிடம் பணம் பெறுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வர்ணனையாளர்கள் வரவழைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், சில வர்ணனையாளர்கள் காளைகளின் உரிமையாளர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு சில காளைகளின் பெயர்களை பலமுறை பெருமையாக பேசுவதோடு, வெற்றி அறிவிப்புகளையும் வெளியிடுவதால் குழப்பம் நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பணம் கொடுக்காத ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்களுக்கு சொந்தமான காளைகளின் பெயர்களை வாசிக்காமல் அனுப்பி வைப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

எனவே, ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது ஒவ்வொரு சுற்றுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் வர்ணனையாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வர்ணனையாளர்களையும் வர்ணனையில் ஈடுபடுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


1 More update

Next Story