ரூ.22 கோடியில் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம்: 31-ந் தேதி மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

இந்தியாவிலேயே ஒரு திறந்தவெளி அருங்காட்சியகம் அமைய பெற்றிருப்பது தமிழ்நாட்டில்தான்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியன் கீழடியில் அகழாய்வு நடைபெற்ற இடங்களில் திறந்தவெளி அருங்காட்சியம் அமைக்க ரூ.22 கோடி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
இந்த திறந்தவெளி அருங்காட்சியகம் 2 அரங்குகளாக அமைக்கப்பட்டு, அகழாய்வு தளங்கள் கண்ணாடி தளமாக மாற்றப்பட்டது. அங்கு அமைச்சர் பெரியகருப்பன், சிவகங்கை மாவட்ட கலெக்டர் பொற்கொடி, போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழர்களின் பழங்கால நாகரிகம், கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் தங்கம்தென்னரசு ஆகியோரின் முயற்சியாலும் கீழடி அகழாய்வு வெகுவிரைவாக, நேர்த்தியான முறையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த அகழாய்வில் பல்வேறு அரிதான பொருட்கள் கிடைத்தன. அவற்றை எல்லாம் காட்சிப்படுத்த வேண்டும்.
கீழடி அருங்காட்சியகத்திற்கு நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு சுமார் ரூ.6 கோடி வரை வழங்கப்பட்டுள்ளது. திறந்தவெளி அருங்காட்சியகம் 5,914 சதுர மீட்டரில், ரூ.22 கோடியில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே ஒரு திறந்தவெளி அருங்காட்சியகம் அமைய பெற்றிருப்பது தமிழ்நாட்டில்தான். குறிப்பாக கீழடியில் மட்டுமே.
இந்த பணிகளை பொதுப்பணித்துறை சார்பில் அமைச்சர் எ.வ.வேலு பலமுறை ஆய்வு செய்துள்ளார். இந்த திறந்தவெளி அருங்காட்சியகத்தை வருகிற 31-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து பார்வையிட்டு திறந்து வைக்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.






