மேகதாது அணை விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு - தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் நன்றி


மேகதாது அணை விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு - தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் நன்றி
x

கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகளும் தனித்தனி மனுக்களை தாக்கல் செய்திட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சென்னை,

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்த தமிழக அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வெளிவந்ததால், கர்நாடக அரசு மேகதாது அணைக்கான பணிகளை தொடங்கி விட்டது. தமிழ்நாடு அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பை மறு ஆய்வு செய்திட வலியுறுத்தி 11.12.2025 அன்று சீராய்வு மனுவை தாக்கல் செய்திருக்கிறது. மத்திய நீர்வள குழுமத்திடமும் 9.12.2025 அன்று ஒரு விரிவான அறிக்கையை தமிழ்நாடு அரசு கொடுத்திருக்கிறது.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு பின் தொடுக்கப்பட்ட வழக்குகளின் விசாரணை முடிவில் 16.2.2018 அன்று வெளியிட்ட சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிரான செயல் இது என தமிழ்நாடு அரசு இதில் குறிப்பிட்டிருப்பது நியாயமானது.

இந்த தீர்ப்பு வந்த உடனேயே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில அளவில் தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியதுடன்... உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தோம். எனவே தமிழக முதல்-அமைச்சரை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பாராட்டி நன்றி கூறுகிறோம்.

காவிரியின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் புதிய அணையை கட்டிட கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதற்காக பல்வேறு யுக்திகளை கடைப்பிடித்து வருகிறது. முதலில் மத்திய அரசின் நீர்வளத் துறையிடம் அனுமதி கோரியது. மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் இதற்கான அறிக்கை கொடுத்து அனுமதி கோரியது. இத்துறையும் விரிவான அறிக்கையை கர்நாடக அரசிடம் கேட்டிருந்தது.

அதன் அடிப்படையில் ஆணையக்கூட்டத்தில் இதை விவாதப்பொருளில் சேர்த்து விவாதித்திடும் நிலையில் நிகழ்ச்சி நிரலில் சேர்த்து இருந்ததை தமிழகத்தின் எதிர்ப்பால் தாங்கள் நினைத்ததை சாதிக்க முடியாமல் காவிரி ஆணையம் ஒத்தி வைத்தது. பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் தமிழ்நாடு அரசின் சார்பாக பங்கு கொண்ட நமது உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்து முறியடித்தனர்.

இதன்பின்தான் காவிரி ஆணையக்கூட்டத்தில் மேகதாது அணைக்கான அறிக்கையை விவாதித்திட காவிரி ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுவை கர்நாடகம் தாக்கல் செய்தது. தமிழ்நாடு அரசு இதை எதிர்த்து வாதாடிய நிலையிலும் காவேரி ஆணையக்கூட்டத்தில் கர்நாடக அரசு மேகதாது அணைக்கான விரிவான அறிக்கையை தாக்கல் செய்யலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது என்பது தமிழகத்திற்கான அநீதியாகும்.

இதற்கு முன்பே காவேரி ஆணையமும், மத்திய அரசின் ஜல் சக்தி துறையும், இதற்கு இசைவாக இருக்கும் நிலையில் இந்த தீர்ப்பு விரைவாக மேகதாது அணை கட்டுமானத்திற்கான அனுமதியாக கருதி, கர்நாடக அரசு இதற்கான செயல்பாட்டை தீவிரப்படுத்தி உள்ளது. நவம்பர் 18-ந்தேதி கர்நாடகத்தின் துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் கர்நாடக நீர் பாசனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் இந்த அணை கட்டுமானத்திற்கான 30 பேர் கொண்ட தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் பொறியாளர்கள் குழுவை அமைத்ததுடன், செயல்படுத்திடும் பொறுப்பை கர்நாடக இன்ஜினியரிங் ஆராய்ச்சி நிலைய இயக்குனரித்திடம் கர்நாடக அரசு ஒப்படைத்துள்ளது.

அடுத்து காவிரி ஆணைய கூட்டத்தில் இதை விவாதிக்கும் நிலையில், மேகதாது அணைக்கான கருத்துருவை கொடுப்பதற்கும் தயாராக உள்ளது. விவாதிப்பது தானே என்று அலட்சியமாக இருந்தால் இந்த முதல் கட்ட நடவடிக்கையே கர்நாடகத்தின் சாதகமான நிலையாக எடுத்து கொள்ளப்படும்.

எனவே மறுசீராய்வு மனு உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வகையில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும் இதனால் பாதிக்கப்பட இருக்கிற கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகளும் தனித்தனி மனுக்களை தாக்கல் செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story