துணை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

இந்த உத்தரவால் தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் எவ்வித பயனும் கிடைக்காது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட் தேர்வு' ரத்து செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கை தமிழக மக்களிடையே வலுப்பெற்று வரும் நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், துணை மருத்துவப் படிப்பிற்கும் 'நீட் தேர்வு கட்டாயம்' என்ற முடிவினை மத்திய அரசு அறிவித்து இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
வருகின்ற கல்வி ஆண்டு முதல் இரண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளான Bachelor of Physiotherapy (BPT) and Bachelor of Occupational Therapy (BOT) ஆகியவற்றில் சேர்ந்து படிக்க 'நீட் தேர்வு' கட்டாயம் என்று National Commission for Allied and Health Care Profession 2 பிறப்பித்துள்ளது தமிழ்நாட்டில் உள்ள ஏழையெளிய கிராமப்புற மாணவ மாணவியரை கடுமையாக பாதிக்கும்.
மருத்துவ துணைப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் 'நீட் தேர்வு' என்பது கிராமப் புறங்களிலும், புறநகர் பகுதிகளிலும் உள்ள மாணவ, மாணவியருக்கு எதிரான செயல். மத்திய அரசின் இந்த முடிவு தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் கிராமப்புற மாணவ மாணவியரின் உயர் கல்விக்கு பயனளிக்காது என்பதைத் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏற்கெனவே மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் ஏழையெளிய மாணவ மாணவியர் 'நீட்' தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் சேர கடன் வாங்கி அதிக கட்டணம் செலுத்தி வருகின்ற நிலையில், இந்தப் பயிற்சி வகுப்புகளில் சேர வசதி இல்லாதவர்கள் மருத்துவ துணைப் படிப்புகளை பயின்று வந்தனர். இந்தப் படிப்பிற்கும் வேட்டு வைக்கும் வகையில் மத்திய அரசின் தற்போதைய உத்தரவு அமைந்துள்ளது. மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல் இதுபோன்ற உத்தரவை பிறப்பிப்பது மாநில சுயாட்சிக்கு எதிரான செயல். மத்திய அரசின் இந்த நடவடிக்கை வருங்காலத்தில் அனைத்து மருத்துவ துணைப் படிப்புகளுக்கும் 'நீட்' தேர்வினை நீட்டிக்க வழி வகுக்கும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ மாணவியர் மருத்துவ துணைப் படிப்புகளை படித்தால், அவர்கள் தமிழ்நாட்டின் தேவையை பூர்த்தி செய்வார்கள். அதே சமயத்தில், மருத்துவ துணைப் படிப்புகளுக்கு 'நீட்' தேர்வு கட்டாயம் என்ற உத்தரவு அமல்படுத்தப்பட்டால், வெளி மாநிலங்களிலிருந்து பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அவர்கள் தமிழ்நாட்டில் வந்து படித்துவிட்டு தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு பணியாற்ற சென்று விடுவார்கள். இதன் மூலம் தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் எவ்வித பயனும் கிடைக்காது.
அதே சமயத்தில், தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர் பயின்றால், அதன் பயன் தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் கிடைக்கும். உயர் கல்விக்கான நுழைவு என்பது பன்னிரெண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் இருப்பதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும். ஏற்கெனவே மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நீக்கப்பட வேண்டுமென்று தமிழ்நாட்டு மக்கள் வலியுறுத்துகின்ற நிலையில், மருத்துவ துணை படிப்புகளுக்கும் 'நீட்' தேர்வை நடைமுறைப்படுத்துவது தமிழ்நாட்டு மக்களை புறக்கணிப்பதற்குச் சமம்.
தமிழக மக்களின் வலியுறுத்தலையும், ஏழையெளிய கிராமப்புற மக்களின் நலனையும் கருத்தில், மருத்துவ துணைப் படிப்புகளுக்கான 'நீட்' தேர்வினை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் சார்பில் மத்திய அரசினைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






