பழனி முருகன் கோவிலில் ஒரே நாளில் 80 டன் பஞ்சாமிர்தம் விற்று சாதனை

பழனி முருகன் கோவிலில் ஒரே நாளில் 2,65,940 பஞ்சாமிர்த டப்பாக்கள் விற்பனையாகி உள்ளன.
பழனி முருகன் கோவிலில் ஒரே நாளில் 80 டன் பஞ்சாமிர்தம் விற்று சாதனை
Published on

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உண்டு. அதன்படி பழனி என்றாலே நாவை சுண்டி இழுக்கும் பஞ்சாமிர்தம் தான் சிறப்பு. பழனி கோவிலில் தயாராகும் பஞ்சாமிர்தம் விற்பனைக்காக அடிவாரம், கிரிவீதிகள் என பல்வேறு இடங்களில் பஞ்சாமிர்த ஸ்டால்கள்' அமைக்கப்பட்டுள்ளன.

பழனி முருகன் கோவிலுக்கு தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் ஊருக்கு திரும்பும்போது கோவிலில் விற்கப்படும் பஞ்சாமிர்தத்தை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தம் தனித்த சுவை கொண்டது என்பதால் அதற்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது கார்த்திகை மாத சீசன் என்பதால் சபரிமலை சென்றுவிட்டு வரும் அய்யப்ப பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட பழனி வருகின்றனர். இதனால் பழனி முருகன் கோவில், அடிவாரம் கிரிவீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பழனி வரும் அய்யப்ப பக்தர்கள் கோவில் பஞ்சாமிர்தத்தை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். பழனி முருகன் கோவிலில் ஒரே நாளில் சுமார் 80 டன் (ஒரு டன் என்பது ஆயிரம் கிலோ) பஞ்சாமிர்தம் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

இதுபற்றி கோவில் நிர்வாகம் விடுத்துள்ள அறிவிப்பில், கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 27-ந்தேதி ஒரு நாளில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 283 டப்பாக்கள் விற்பனையானது. அதைத்தொடர்ந்து கடந்த 19-ந்தேதி 1 லட்சத்து 98 ஆயிரத்து 480 டப்பாக்கள் விற்பனையானது. ஆனால் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 65 ஆயிரத்து 940 டப்பாக்கள் (80 ஆயிரம் கிலோ) விற்பனையாகி உள்ளது. பக்தர்களுக்கு தட்டுப்பாடு இன்றி கிடைக்க பஞ்சாமிர்த தயாரிப்பு பணிகள் 24 மணி நேரமும் நடந்து வருகிறது என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com