பேரூர் அடிகளார் நூற்றாண்டு விழா: ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு அரச மரம் நடவு செய்ய திட்டம்

பேரூர் ஆதீனம் செய்தியாளர் சந்திப்பு
பேரூர் அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு அரச மரம் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேசியதாவது:-
நம் நாட்டில் ஆல், அரசு, வேம்பு உள்ளிட்ட மரங்களினால் கிடைக்கும் ஆன்மீக மற்றும் மருத்துவ பலன்களை உணர்ந்து அம்மரங்களுக்கு தனித்த மற்றும் உயர்ந்த இடம் வழங்கப்பட்டு வந்துள்ளது.
நமது கலாச்சாரத்தில் அரச மரத்திற்கு கீழ் வழிபாடுகளும், ஆல மரத்திற்கு கீழ் உலக விஷயங்களும் நடைபெற்று வந்தன. அரச மரங்கள் நம் மண்ணின் மரமாக, நம் கிராமங்களின் அடையாளமாக பல நூற்றாண்டுகளாகவே இருந்து வருகிறது.
இன்று பல்வேறு அறிவியல் ஆய்வு முடிவுகள் அரச மரத்தின் மூலம் கிடைக்கும் மருத்துவ பயன்களை உலகிற்கு எடுத்து கூறி வருகின்றன. குறிப்பாக இலை, பால், வேர், பட்டை என அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பெண்களின் கர்ப்பப்பை கோளாறுகள் முதல் கல்லீரல் பிரச்சனைகள் வரை பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு அரச மரத்தின் மூலம் தீர்வுகள் கிடைக்கும் என்பதை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் பேரூர் ஆதீனத்தின் "24-ஆவது குரு மகாசன்னிதானம் தெய்வத்திரு பேரூர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார்" அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு அரச மரத்தினை நடவு செய்வதை இலக்காக கொண்டு "ஒரு கிராமம் ஒரு அரச மரம்" எனும் மாபெரும் திட்டம் துவங்கப்பட உள்ளது.
இம்மாபெரும் திட்டம் வரும் 20-ஆம் தேதி (நாளை) பேரூர் ஆதீன வளாகத்தில் முதல் மரக்கன்று நடவு செய்து துவங்கப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் வழிகாட்டுதலின் படி நொய்யல் ஆறு அறக்கட்டளை, கோயம்புத்தூர் கட்டிட கட்டுமானம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு மற்றும் ஓசூர் புவியின் நண்பர்கள் ஆகிய அமைப்புகள் இணைந்து முதல் கட்டமாக கோயம்புத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 2,000 கிராமங்களில் அரச மரங்களை நடவு செய்ய உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
பேட்டியின்போது காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன், நொய்யல் அறக்கட்டளையின் அறங்காவலர் ஆறுச்சாமி மற்றும் கோவை கட்டிட கட்டுமானம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராமநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
'ஒரு கிராமம் ஒரு அரச மரம்' திட்ட துவக்க விழாவில் பேரூர் ஆதீனத்தின் 25-வது குரு மகாசன்னிதானம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், சிரவை ஆதீனம், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் சொல் ஏறு உழவர் கு.செல்லமுத்து, கோவை கட்டிட கட்டுமானம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராமநாதன், நொய்யல் ஆறு அறக்கட்டளை அறங்காவலர் ஆறுச்சாமி, சிறுதுளி அறக்கட்டளை அறங்காவலர் வனிதா மோகன் மற்றும் திரைப்பட நடிகர் படவா கோபி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.






