பிரதமர் மோடி நாளை திரிபுரா, அருணாச்சல பிரதேசம் செல்கிறார்

இட்டா நகரில் ரூ.3,700 கோடி மதிப்புள்ள 2 பெரிய நீர்மின் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி சமீபத்தில் வட கிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர் சென்று வந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி வடகிழக்கு மாநிலங்களுக்கு மீண்டும் செல்கிறார். அவர் அருணாச்சல பிரதேசம், திரிபுராவுக்கு நாளை பயணம் மேற்கொள்கிறார். ரூ.5,100 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அருணாச்சல பிரதேசத்தில் நீர் மின் ஆற்றலை பயன்படுத்தி நிலையான எரிசக்தியை ஊக்குவிக்கும் வகையில் இட்டா நகரில் ரூ.3,700 கோடி மதிப்புள்ள 2 பெரிய நீர்மின் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். சியோம் துணைப் படுகைப் பகுதியில் ஹியோ நீர்மின் திட்டம் (240 மெகாவாட்) மற்றும் டாடோ-ஐ நீர்மின் திட்டம் (186 மெகாவாட்) ஆகியவை உருவாக்கப்படும்.தவாங்கில் அதிநவீன மாநாட்டு மையத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். தவாங்கின் எல்லை மாவட்டத்தில் 9,820 அடிக்கு மேல் உயரத்தில் அமைந்துள்ள தேசிய சர்வதேச மாநாடுகள், கலாச்சார விழாக்கள் கண்காட்சிகள் நடத்துவதற்கு முக்கிய இடமாக இந்த மையம் செயல்படும். 1,500-க்கும் மேற்பட்ட இருக்கைகளை கொண்டுள்ளது.
வேலைக்கு செல்லும் பெண்கள் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு இணைப்பு, சுகாதாரம், தீயணைப்பு பாதுகாப்பு, ரூ.1,290 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைப்பார்.பின்னர் அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து பிரதமர் மோடி திரிபுரா செல்கிறார். மாதாபாரியில் உள்ள 'மாதா திரிபுர சுந்தரி கோவில் வளாகத்தின்' மேம்பாட்டுப் பணிகளையும் தொடங்கி வைப்பார். இது திரிபுராவின் கோமதி மாவட்டத்தின் உதய்பூர் நகரில் அமைந்துள்ள பழமையான 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும்.






