போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு: 3,644 இடங்களுக்கு 2 லட்சம் பேர் போட்டி

போலீஸ் வேலைக்கான எழுத்துத்தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் 45 மையங்களில் நடந்தது.
சென்னை,
தமிழக காவல்துறையில், 2,833 ஆண், பெண் 2-ம் நிலை காவலர்கள் பணியிடங்களும், சிறைத்துறையில் 180 சிறைத்துறை காவலர்கள் பணியிடங்களும், தீயணைப்புத்துறையில் 631 தீயணைப்பாளர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளன. இவ்வாறு மொத்தம் 3,644 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்த தேர்வில் கலந்து கொள்ள 2 லட்சத்து 24 ஆயிரத்து 500 ஆண், பெண்கள் விண்ணப்ப மனுக்களை அனுப்பி வைத்திருந்தனர். இதற்கான எழுத்துத்தேர்வு நேற்று தமிழ்நாடு முழுவதும் 45 மையங்களில் நடந்தது. தேர்வில் கலந்துகொள்வதற்காக நேற்று காலை 8 மணி முதலே ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையங்களில் குவிய தொடங்கினார்கள்.
காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.30 மணிக்கு தேர்வு முடிந்தது. இந்த தேர்வு எழுத 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும். ஆனால் தேர்வு எழுத வந்தவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகளும், முதுநிலை பட்டதாரிகளுமாய் இருந்தார்கள். என்ஜினீயரிங் பட்டதாரிகளும்கூட தேர்வு எழுத வந்திருந்தனர். இந்த தேர்வில் தமிழகம் முழுவதும் 2 லட்சம் பேர் கலந்து கொண்டதாக சீருடை பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர். திருநங்கைகளும் தேர்வில் கலந்து கொண்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்களிடம் கேட்டபோது, சிலர் கேள்விகள் எளிதாக இருந்ததாக குறிப்பிட்டனர். சிலர் சுமாராக இருந்ததாக தெரிவித்தனர். அறிவியல் சம்பந்தப்பட்ட கேள்விகள் அதிகமாக காணப்பட்டதாகவும் கூறினார்கள். பொது அறிவு சம்பந்தமான 45 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. உளவியல் பிரிவில் 25 கேள்விகளும் இருந்தன.
எழுத்துதேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கே உடல்தகுதித்தேர்வு நடத்தப்படும். அதில் தேர்வு செய்யப்படுவோர் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.






