எல்.ஐ.சி. பெண் அதிகாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை: பிரேமலதா வலியுறுத்தல்


எல்.ஐ.சி. பெண் அதிகாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை: பிரேமலதா வலியுறுத்தல்
x

எல்.ஐ.சி. பெண் அதிகாரி கொலை வழக்கில் குற்றவாளியை கைது செய்துள்ளது வரவேற்கத்தக்கதாகும் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.

சென்னை,

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

மதுரை மேலவெளி வீதியில், ரெயில் நிலையம் எதிரில் அமைந்துள்ள இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக (எல்.ஐ.சி.) கட்டிடத்தின் அலுவலகத்தில், 20.12.2025 அன்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில், தனியறையில் சிக்கியிருந்த முதுநிலை மேலாளர் கல்யாணி உயிரிழந்தார். இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையின் அடிப்படையில், கல்யாணியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த குற்றவாளியான ராமகிருஷ்ணனை கைது செய்துள்ளது வரவேற்கத்தக்கதாகும்.

கடமையின்போது நேர்மையாகவும் உண்மையுடன் செயல்பட்ட ஒரு பெண் அதிகாரியை, அவர் செய்த தவறை சுட்டிக்காட்டியதற்காக கொடூரமாகக் கொலை செய்துள்ள இந்த செயல் கடுமையாயன கண்டனதிற்குறியதும், மனிதநேயமற்றதும் ஆகும். இத்தகைய கொடிய குற்றங்கள் கடுமையாக தண்டிக்கப்படாத பட்சத்தில், சட்டத்தை நம்பி நேர்மையுடன் பணியாற்றும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகும்.

குறிப்பாக பெண்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், சமூகத்தில் சட்டத்தின் மீது நம்பிக்கை இன்மையையும் இது ஏற்படுத்தும். எனவே, இந்த கொடூரக் குற்றத்தைச் செய்த குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையான ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என தேமுதிக சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு எல்.ஐ.சி. அலுவலகத்தில் வேலையும், இழப்பீடு தொகையும் வழங்கிட வேண்டும்.

மேலும், இனி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story