கார்த்திகை தீபத்திருவிழா: பழனி முருகன் கோவிலில் இன்று பக்தர்களுக்கு கட்டுப்பாடு

கோப்புப்படம்
கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் பரணி தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது.
பழனி,
பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டுதோறும் வெகுசிறப்புடன் நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 7-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜைக்கு பின் சண்முகார்ச்சனை, சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் 6.45 மணிக்கு தங்க சப்பரத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.
விழாவின் 6-ம் நாளான நேற்று மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்றது. அதையடுத்து யாகசாலையில் இருந்து பரணி தீபம் மூலவர் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பரணி தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் 6 மணிக்கு சண்முகார்ச்சனை, சண்முகர், வள்ளி-தெய்வானை, சின்னக்குமாரருக்கு சிறப்பு அலங்காரம் வழிபாடு நடந்தது. தொடர்ந்து 6.45 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் உட்பிரகார உலா நிகழ்ச்சி நடந்தது. பின்பு 7.30 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெற்றது.
இந்நிலையில் திருவிழாவில் இன்று (புதன்கிழமை) பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மதியம் 2 மணிக்கு சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை நடைபெறுகிறது.
மாலை 4 மணிக்கு சாயரட்சைபூஜை, மாலை 4.45 மணிக்கு சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் உலா வருகிறார். தொடர்ந்து மலைக்கோவிலின் நான்கு திசைகள் மற்றும் தீப ஸ்தம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி, சொக்கப்பனை கொளுத்துதல் ஆகியவை நடக்கிறது.
பக்தர்களுக்கு கட்டுப்பாடு
கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி இன்று தங்கரத புறப்பாடு ரத்து செய்யப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. மேலும் கார்த்திகை திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும். இதில் பக்தர்கள் வருகைக்கு ஏற்ப, பிற்பகல் 2 மணியளவில் குடமுழுக்கு அரங்கம் நுழைவு வாயில் தற்காலிகமாக அடைக்கப்படும். தொடர்ந்து மீண்டும் மாலை 6 மணிக்கு மேல் தரிசனத்திற்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






