அரசு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு: சிவகங்கை மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் இன்று சுற்றுப்பயணம்


அரசு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு: சிவகங்கை மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் இன்று சுற்றுப்பயணம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 17 Jun 2025 6:30 AM IST (Updated: 17 Jun 2025 6:31 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சுற்றுப்பயணம் செய்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் இன்று தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மேலும் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றுகிறார். இதுகுறித்து அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறியதாவது,

தமிழக துணை முதல்-அமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அரசின் திட்டப்பணிகள் குறித்தும், அவற்றின் முன்னேற்றம் குறித்தும், மக்களின் குறைகளையும் கேட்டு ஆய்வு நடத்தி வருகிறார்.

அந்த வகையில் இன்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மதுரையில் இருந்து காரில் சிவகங்கை வரும் துணை முதல்-அமைச்சருக்கு காலை 9.30 மணி அளவில் திருப்புவனத்தில் மாவட்ட கழகம், எனது தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பின்னர் காலை 10 மணி அளவில் காணூரில் ரூ.40 கோடியில் நடைபெற்று வரும் தடுப்பணை திட்டப்பணியை பார்வையிடுகிறார். தொடர்ந்து 10.30 மணி அளவில் சிவகங்கை முதல் நகர் மன்ற தலைவர், கட்சியின் மூத்த முன்னோடி சொ.லெ.சாத்தையாவை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரிக்கிறார். 11 மணி அளவில் சிவகங்கை தாலுகா, சோழபுரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டப்பணிகளை பார்வையிடுகிறார்.

பகல் 11.30 மணி அளவில் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் தலைமையில் அரசின் திட்டப்பணிகள், அவற்றின் செயல்பாடுகள், முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். பகல் 12 மணியளவில் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள திடலில் முடிவடைந்த திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வைக்கிறார். தொடர்ந்து அந்த மேடையில் ஏராளமானோருக்கு பல்வேறு அரசு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

தொடர்ந்து சிவகங்கை அரசு வேலுநாச்சியார் மாளிகையில் உணவு சாப்பிடுகிறார். தொடர்ந்து மாலை 4 மணி அளவில் திருப்பத்தூரில் ராஜேஸ்வரி மகாலில் கட்சியின் அனைத்து நிர்வாகிகள், துணை அமைப்பாளர்களை சந்திக்கிறார். பின்னர் ஆர்.கே.மகாலில் மாவட்ட இளைஞரணி, ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களை சந்திக்கிறார். 6.45 மணி அளவில் மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார். தொடர்ந்து இரவு மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story