மணல் குவாரி கலவர வழக்கு: அமைச்சர் சிவசங்கர் உள்பட 27 பேர் விடுதலை

வழக்கில் அனைத்து சாட்சிகளின் விசாரணையும் முடிவடைந்த நிலையில் நேற்று மாவட்ட முதன்மை நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டம் நெய்வாசலுக்கும், அரியலூர் மாவட்டம் செந்துறை சன்னாசிநல்லூருக்கும் இடையே வெள்ளாற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வந்தது. இந்த குவாரி தங்களுக்கு தான் சொந்தம் என்று நெய்வாசல் மக்களுக்கும், சன்னாசிநல்லூர் மக்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து கடந்த 31.1.2015 அன்று இருமாவட்ட வருவாய்த்துறை அலுவலர்களும் வெள்ளாற்றை அளவீடு செய்து கல் வைத்து பிரித்தனர். ஆனால் அதை சன்னாசிநல்லூர் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து அப்போதைய குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வும், தற்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சருமான சிவசங்கர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் கலவரமாக மாறியதில், 9 போலீஸ்காரர்கள் கல்வீசி தாக்கப்பட்டனர். 2 பொக்லைன் எந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டன. இது குறித்து அமைச்சர் சிவசங்கர் உள்பட 31 பேர் மீது ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கு கடலூர் 1-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடக்கும் போதே, 4 பேர் இறந்துவிட்டனர். இதையடுத்து இந்த வழக்கு எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் வழக்கை விசாரிக்கும் மாவட்ட அமர்வு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு நடந்து வந்தது. இந்த வழக்கில் அனைத்து சாட்சிகளின் விசாரணையும் முடிவடைந்த நிலையில் நேற்று மாவட்ட முதன்மை நீதிபதி சுபத்திராதேவி தீர்ப்பு வழங்கினார். இதில் அமைச்சர் சிவசங்கர் உள்பட 27 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com