தென்காசி: காவலர் தேர்வில் செல்போன் பயன்படுத்தி மோசடி - 3 பேரிடம் விசாரணை

போலீசார் சம்பந்தப்பட்ட 3 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி,
தமிழகத்தில் நேற்று காவல்துறை 2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 45 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை எழுதுவதற்கு 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். தேர்வு எழுத வந்தவர்களை காவலர்கள் பரிசோதனை செய்து தேர்வு எழுதும் மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
முன்னதாக தேர்வு எழுத வருபவர்கள் ஹால் டிக்கெட், புகைப்பட அடையாள அட்டை மற்றும் கருமை நிற பேனா ஆகியவற்றை கட்டாயமாக எடுத்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச், புளூடூத் ஹெட்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை எடுத்துவர அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் தென்காசி மாவட்டம் இலஞ்சியில் அமைந்திருந்த தேர்வு மையத்தில், தேர்வு எழுதுவதற்காக வந்த கோபிகிருஷ்ணன் மற்றும் பாண்டியராஜ் ஆகிய இருவர் செல்போன் மூலம் வினாத்தாளை படம் பிடித்து, வெளியில் அனுப்பி பதில் பெற்று தேர்வெழுதியதாகவும், இவர்களுக்கு ஒரு பெண் உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்து போலீசார் சம்பந்தப்பட்ட 3 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






