தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு 1,000 கிலோ சாதத்தால் அபிஷேகம்: நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம்


தினத்தந்தி 6 Nov 2025 10:59 AM IST (Updated: 6 Nov 2025 11:05 AM IST)
t-max-icont-min-icon

அன்னாபிஷேகம் மற்றும் சிறப்பு தரிசனத்தைத் தொடர்ந்து, லிங்கத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கும், கால்நடைகளுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

இங்கு பெருவுடையார், பெரியநாயகி, வராகி, விநாயகர், முருகன், கருவூரார், நடராஜர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இந்த பெரியகோவில் கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரியதாகும். 6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட பீடமும், 13 அடி உயரம், 23½ அடி சுற்றளவுள்ள லிங்கம் என தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.

அன்னாபிஷேகம்

இத்தகைய சிறப்புமிக்க பெருவுடையாருக்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நேற்று ஐப்பசி பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் செய்வதற்காக 1000 கிலோ பச்சரிசி சாதம், 500 கிலோ காய்கனிகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு அன்னாபிஷேகம் நடந்தது. பின்னர் வெண்டைக்காய், புடலங்காய், வெள்ளரிக்காய், கத்தரிக்காய், முள்ளங்கி, சவ்சவ், கேரட், வெண்டைக்காய், சோளக்கதிர், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், வாழைப்பூ உள்ளிட்ட காய்களாலும், தர்பூசணி, அன்னாசிபழம், எலுமிச்சம்பழம் உள்ளிட்ட பழங்களாலும், மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பக்தர்கள் தரிசனம்

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் லிங்கத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கும், கால்நடைகளுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

மீதமுள்ள அன்னம் அருகில் உள்ள கல்லணைக்கால்வாயில் நீர்வாழ் உயிரினங்களுக்கு உணவாக போடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தானம், இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து இருந்தனர்.

1 More update

Next Story