வாக்காளர் உரிமைகளை பாதுகாக்கும் போராட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் - மு.வீரபாண்டியன்


வாக்காளர் உரிமைகளை பாதுகாக்கும் போராட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் - மு.வீரபாண்டியன்
x

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த முறையில் பீகாரில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் விடுபட்டுள்ளனர்.

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இந்தியத் தேர்தல் ஆணையம் புதிதாக அறிவித்துள்ள சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைக்கு, அறிவிக்கப்பட்ட 12 மாநிலங்களிலும் கடுமையான எதிர்ப்பு வலுத்து வருகின்றது. கேரள மாநில சட்டப் பேரவையில் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மிகப் பெரும்பாலான அரசியல் கட்சிகள் நவம்பர் 2 ஆம் தேதி கூடி இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பயன்படுத்திய வாக்காளர் பட்டியலை சுருக்க முறை திருத்தம் செய்து 2026 சட்டமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த முறையில் பிகாரில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் விடுபட்டுள்ளனர். சிறப்புத் தீவிர திருத்தம் நடைமுறையில் வாக்காளர்களின் உரிமையை பறித்து, ஆளும் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் தீய நோக்கம் கொண்டதாக புகார்கள் எழுந்துள்ளன. நாடாளுமன்ற மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அரியானா மாநிலத்தில் 25 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக ஆதாரங்களுடன் ஊடக செய்தியாளர்கள் முன்பு குற்றம் சாட்டியுள்ளார்.

சிறப்புத் தீவிர திருத்தத்தை எதிர்ப்பதில் அரசியல் கட்சிகள் முனைந்து செயல்படுவது, அவைகளின் நலனை பாதுகாக்க மட்டும் அல்ல; அது அரசியல் கட்சிகள் தொடர்புடைய பிரச்சினை மட்டும் அல்ல அரசியலமைப்பு சட்டத்தின் படியும், மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின் படியும் 18 வயது நிரம்பிய ஒவ்வொரு வாக்காளரின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கையாகும்.

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக் குழுக்கள், இடைக்குழுக்கள், கிளை அமைப்புகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர திருத்தம் ஏற்படுத்தும் விளைவுகளை, பொதுமக்களுக்கு விளக்கி கூறி அணிதிரட்டி, ஆர்ப்பாட்ட இயக்கத்தில் பெருமளவில் பங்கேற்க வேண்டும்.

மக்களாட்சி முறையை பாதுகாக்கும் ஜனநாயக உரிமை போராட்டம் என்பதை கருத்தில் கொண்டு, வரும் 11.11.2025 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளும், அதன் தோழமை அமைப்புகளும் மாவட்டத் தலைநகர்களில் அறிவித்துள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் வாக்காளர்கள் அனைவரும் பங்கேற்று ஆதரிக்குமாறு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அறைகூவி அழைக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story