திருக்கார்த்திகை பண்டிகை.. தூத்துக்குடியில் பனை ஓலை விற்பனை விறுவிறுப்பு

கொழுக்கட்டை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பனை ஓலை ரூ.50 முதல் முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் திருக்கார்த்திகை விழா கொண்டாடப்படும். அன்றைய தினம் இரவில், வீடுகள் தோறும் அகல் விளக்கு தீபம் ஏற்றுவதும், பனைஓலை கொழுக்கட்டை உள்ளிட்டவை தயார் செய்து படைத்து வழிபடுவதும் வழக்கம்.
அவ்வகையில் இந்த ஆண்டுக்கான திருக்கார்த்திகை விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஏற்கனவே பஜார் கடைகளில் அகல் விளக்குகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. அகல் விளக்குகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
அதேபோன்று கொழுக்கட்டைகள் தயார் செய்வதற்காக பனை ஓலைகளும் ஏராளமாக விற்பனைக்காக ஆங்காங்கே சாலையோரங்களில் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் இருந்து பனை ஓலைகள் அதிகளவில் விற்பனைக்காக தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. ஒரு ஓலை ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகமாக இருந்தாலும், பொதுமக்கள் ஆர்வமுடன் பனை ஓலைகளை வாங்கி செல்கின்றனர்.






