தூத்துக்குடி: லாரிகள் மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழப்பு

அருப்புக்கோட்டையில் இருந்து ஒரு லாரியில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, அதன் மீது பின்னால் வந்த மினி கண்டெய்னர் லாரி மோதியது.
கன்னியாகுமரி மாவட்டம், தெனவிளை, வில்லுக்குறியைச் சேர்ந்த தேவராஜ் மகன் ராபர்ட் (வயது 46), லாரி டிரைவர். இவர் அருப்புக்கோட்டையில் இருந்து லாரியில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் இடைச்செவல், பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த மினி கண்டெய்னர் லாரி மோதியது.
இதில் மினி லாரி சாலையின் தடுப்புச் சுவரைத் தாண்டி அணுகு சாலை அருகேயுள்ள ஓடையில் கவிழ்ந்தது. இதில் திருவள்ளூர் மாவட்டம், போரூர், காரம்பாக்கம், அருணாச்சல முதல் தெருவைச் சேர்ந்த மினி கண்டெய்னர் லாரி டிரைவர் துரைராஜ்(48) பலத்த காயமடைந்தார்.
அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






