தூத்துக்குடி: தேங்கி நின்ற மழைநீரில் நடந்து சென்ற முதியவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

தண்ணீரில் மின்கசிவு ஏற்பட்டிருந்த நிலையில், பழனியாண்டி மீது மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை தொடர் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. சில இடங்களில் தண்ணீர் வடிந்தாலும், பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கிய நிலையில் உள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி நால்வர் நகர் பகுதியில் வசித்து வரும் ஓய்வுபெற்ற ஸ்பின்னிங் மில் தொழிலாளியான பழனியாண்டி என்ற முதியவர், பொருட்கள் வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது அவர் சாலையில் தேங்கி நின்ற மழைநீரில் நடந்து சென்றுள்ளார்.
அந்த தண்ணீரில் மின்சார கசிவு ஏற்பட்டிருந்த நிலையில், பழனியாண்டி மீது மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் அப்பகுதிக்கு சென்று, மின்கசிவு ஏற்படாத வகையில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.






