இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 24-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 24 Oct 2025 6:41 PM IST
ஏஐ மூலம் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்தவர் கைது
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்ணின் புகைப்படத்தை ஜெமினி ஏஐ தொழில்நுட்பம் மூலமாக ஆபாசமாக சித்தரித்த மணிகண்டன் (24) கைது செய்யப்பட்டார். மணிகண்டன் மீது சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 24 Oct 2025 6:39 PM IST
பூண்டி ஏரியில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு
பூண்டி ஏரியில் இருந்து 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலை கரையோரங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொசஸ்த்தலை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். புயல் பாதுகாப்பு மையங்கள், பல்நோக்கு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
- 24 Oct 2025 6:35 PM IST
நல்ல நாளுக்காக காத்திருக்கிறேன் - ஆர்.ஜே.பாலாஜி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆர்.ஜே.பாலாஜி சுவாமி தரிசனம் செய்தார். சுவாமி தரிசனம் திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது, கருப்பு படத்தின் பணிகள் 75 சதவீதம் நிறைவு பெற்றதாகவும் கருப்பு படம் விரைவில் வெளியாகும்.. நல்ல நாளுக்காக காத்திருக்கிறேன் என்று அவர் கூறினார்.
- 24 Oct 2025 6:31 PM IST
ஆமைகள் மறுவாழ்வு மையம் - டெண்டர் கோரிய தமிழக அரசு
சென்னை கிண்டியில் ரூ.6 கோடியில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மைய கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.
- 24 Oct 2025 6:29 PM IST
முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிப்பு
ராமநாதபுரம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 13 கிலோ எடையிலான தங்க கவசம் அணிவிக்கப்பட உள்ளது. வரும் 30 ஆம் தேதி குரு பூஜை நடைபெற உள்ளது.
- 24 Oct 2025 5:21 PM IST
கபடியில் தங்கம் வென்ற தமிழ்நாடு வீரர்கள் - துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய மகளிர் மற்றும் ஆடவர் கபடி அணிகளில், சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த தங்கை கார்த்திகாவும், தம்பி அபினேஷ் மோகன்தாஸும் இடம்பெற்றிருந்தது நமக்கெல்லாம் பெருமை. சர்வதேச அரங்கில் வெற்றிக்கொடி நாட்டி தமிழ்நாட்டுக்குப் பெருமைத் தேடித் தந்துள்ள கார்த்திகா மற்றும் அபினேஷை வாழ்த்தி மகிழ்கிறோம் என துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
- 24 Oct 2025 5:19 PM IST
பூண்டி ஏரிக்கு நீர் வரத்து 8,500 கன அடியிலிருந்து 10,500 கன அடியாக அதிகரித்துள்ளது. ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு உபரி நீர் வெளியேற்றம் 7,500 கன அடியிலிருந்து 9,500 கன அடியாக அதிகரிக்கப்பட உள்ளது.
- 24 Oct 2025 4:24 PM IST
மேலும் 3 ஆண்டுகள் இன்டர் மியாமிக்காக விளையாடும் மெஸ்ஸி
இன்டர் மியாமி க்ளப்-காக விளையாடி வரும் கால்பந்து வீரர் மெஸ்ஸி, மேலும் 3 ஆண்டுகள் (2028 டிசம்பர் வரை) அந்த அணியில் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
- 24 Oct 2025 4:22 PM IST
ஆணவக் கொலை வழக்கு - குற்றப்பத்திரிகையை தயார் செய்தது சிபிசிஐடி
நெல்லை ஐ.டி. பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகையை தயார் செய்தது சிபிசிஐடி. ஓரிரு நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இவ்வழக்கில் சுர்ஜித், அவரது தந்தை சரவணன் மற்றும் உறவினர் ஜெயபால் ஆகிய மூவரும் கைதாகி நீதிமன்றக் காவலில் உள்ளனர்.
- 24 Oct 2025 4:18 PM IST
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைவு
காலையில் சவரனுக்கு ரூ.320 உயர்ந்த நிலையில் தற்போது ரூ.1,120 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.1,120 குறைந்து ரூ.91,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.140 குறைந்து கிராமுக்கு ரூ.11,400 விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.170க்கு விற்பனை செய்யப்படுகிறது.















