இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 02.01.2026

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 2 Jan 2026 10:29 AM IST
"சல்லியர்கள்" திரைப்பட விமர்சனம்
இலங்கையில் சிங்களப் பிரதேசத்துக்கும், தமிழ் பிரதேசத்துக்கும் இடையே போர் மூள்கிறது. இதில் போராட்டக்காரர்கள் சார்பில் பதுங்கு குழிகளில் மருத்துவ உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
டாக்டர்களாக சத்யாதேவியும், மகேந்திரனும் மருத்துவ தர்மத்தின்படி பணியாற்றுகிறார்கள். ராணுவ வீரரே காயமடைந்து வந்தாலும், அவர்களது உயிரையும் காப்பாற்றுகிறார்கள்.
இதற்கிடையில் பதுங்கு குழிகளில் செயல்படும் மருத்துவ சிகிச்சை மையங்களை வெடிகுண்டு வீசி தகர்க்க ராணுவம் முடிவு செய்கிறது. இதில் டாக்டர்கள் தப்பித்தார்களா, இல்லையா? அடுத்து என்ன ஆனது? என்பதே படத்தின் பரபரப்பான கதை.
- 2 Jan 2026 10:29 AM IST
மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு தடை
மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். காலையில், மணிமுத்தாறு அருவிக்கு குளிக்க வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள், இந்த அறிவிப்பால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 2 Jan 2026 10:29 AM IST
வெறும் 27 தியேட்டர்கள்.. இப்படியே போனால் தமிழ் சினிமா மெல்ல சாகும்- சுரேஷ் காமாட்சி வேதனை
எமது வி ஹவுஸ் புரொடக்ஷன் வெளியீடாக சல்லியர்கள் என்ற படத்தை ஜனவரி ஒன்று அதாவது இன்று வெளியிட இருந்தோம். வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டு பார்த்தால் திரையரங்குகள் கிடைக்கவில்லை. வெறுமனே 27 திரையரங்குகள் மட்டுமே கிடைக்கின்றன. இன்று சிறிய படங்களின் நிலை இப்படித்தான் பரிதாபமாக இருக்கிறது.
வெறும் 27 திரையரங்குகளை வைத்துக்கொண்டு படத்தை எப்படி வெளியிடுவது? அதனால் எங்கள் படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. ஆனாலும் எந்த பெரிய படமும் வெளியாகவில்லை. அப்படியிருந்தும் திரையரங்குகள் தரவில்லை. என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி காட்டமாக பதிவிட்டுள்ளார்.
- 2 Jan 2026 10:27 AM IST
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை சிறப்பு முகாம்
இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள நாளை, நாளை மறுநாள் ஆகிய இரு தினங்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
- 2 Jan 2026 10:17 AM IST
வங்கக்கடலில் 6-ம் தேதி உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி
தென்மேற்கு வங்கக்கடலில் வருகிற 6-ம் தேதி அல்லது அந்த வாரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஒன்று உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்தத் தாழ்வுபகுதியால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற வாய்ப்பு குறைவு எனவும் புயலாக மாற வாய்ப்பில்லை எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 2 Jan 2026 10:15 AM IST
வைகோ நடைபயணம்: காங்கிரஸ் புறக்கணிப்பு
வைகோ நடைபயணத்தை காங்கிரஸ் கட்சியினர் புறக்கணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அழைப்பிதழில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் படம் உள்ளதன் காரணமாக காங்கிரஸ் கட்சியினர் இந்த நடைபயணத்தை புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 2 Jan 2026 9:52 AM IST
தங்கம் விலை உயர்வு... ஒரு சவரன் மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டியது - நிலவரம் என்ன..?
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,00,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.140 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,580-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தைப் போன்றே வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4-ம், கிலோவுக்கு ரூ.4 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.













