வைகோ நடைபயணம்: காங்கிரஸ் புறக்கணிப்பு

இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நடைபயணத்தை தொடங்கி வைத்து பேசுகிறார்.
திருச்சி,
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சமத்துவ பயணம் என்கிற தலைப்பில் ஜனவரி 2-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நடைபயணத்தின் தொடக்க விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை அருகில் உள்ள மாநகராட்சி திடலில் நடைபெறுகிறது.
இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நடைபயணத்தை தொடங்கி வைத்து பேசுகிறார். இதில் பங்கேற்பதற்காக முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இருந்து தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை திடல் வரை சென்று பொதுமக்களை சந்திக்கிறார்.
இந்த நடைபயணத்தில் பங்கேற்க திமுக கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டன. இதன் காரணமாக இந்த நடைபயணத்தில் திமுக கூட்டணி கட்சிகளும் கலந்துகொள்ளும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், வைகோ நடைபயணத்தை காங்கிரஸ் கட்சியினர் புறக்கணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அழைப்பிதழில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் படம் உள்ளதன் காரணமாக காங்கிரஸ் கட்சியினர் இந்த நடைபயணத்தை புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






