இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-04-2025


LIVE
இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-04-2025
x
தினத்தந்தி 1 April 2025 9:30 AM IST (Updated: 1 April 2025 8:05 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 1 April 2025 11:57 AM IST

    கற்றல், கற்பித்தலில் மாற்றம் செய்ய பள்ளிகளுக்கு மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. உத்தரவிட்டுள்ளது.

    நாட்டின் புதிய கல்விக்கொள்கையின்படி, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில், 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பாடங்களில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அதுதொடர்பாக வெளியிட்டுள்ள நெறிமுறைகளை, பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    இது குறித்த அறிவுரைகள், 'www.cbseacademic.nic.in' என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

  • 1 April 2025 11:19 AM IST

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி ஆராட்டு விழாவுக்காக இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் 14-ந்தேதி விஷு கனி தரிசனம், படி பூஜைகள் நடைபெற்று, ஏப்ரல் 18-ந்தேதி இரவு ஹரிவராசனம் முடிந்தவுடன் நடை அடைக்கப்படும்.

    தொடர்ந்து வைகாசி மாத பூஜைக்காக மே 14-ந்தேதி திறக்கப்பட்டு, மே 19-ந்தேதி நடை அடைக்கப்படும். சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்வது அவசியம் ஆகும்.

  • 1 April 2025 10:34 AM IST

    குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பாணையை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டு உள்ளது. இதன்படி, ஜூன் 15-ல் இந்த பணிகளுக்கான முதல்நிலை தேர்வு நடைபெறும்.

    அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் இந்த மாதம் இறுதி வரை (ஏப்ரல் 30) விண்ணப்பிக்கலாம்.

  • 1 April 2025 10:15 AM IST

    தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.67 ஆயிரத்துக்கு மேல் விற்பனையானது. இந்த நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி, சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.68,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,510-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், தங்கம் விலை மீண்டும் இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சம் தொட்டு உள்ளது.

  • 1 April 2025 10:07 AM IST

    பிரதமர் மோடி 6-ந்தேதி தமிழகத்திற்கு வருகை தருகிறார். இதனை முன்னிட்டு ராமேசுவரத்தில் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மண்டபம் முகாம் அருகே உள்ள ஹெலிபேடில் ஹெலிகாப்டரை இறக்கி விமானப்படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

  • 1 April 2025 9:50 AM IST

    மேற்கு வங்காளத்தில் நள்ளிரவில் சிலிண்டர் வெடித்ததில், 4 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியானார்கள். ஆனால், நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 6 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர் என மாநில சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவரான பா.ஜ.க.வை சேர்ந்த சுவேந்து அதிகாரி எக்ஸ் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.

    நாட்டு வெடிகுண்டுகளின் குவியல் மீது மேற்கு வங்காளம் ஏன் அமர்ந்திருக்கிறது? என டி.ஜி.பி. பதிலளிக்க வேண்டும் என அவர் பதிவிட்டு உள்ளார். மேற்கு வங்காளத்தில் உள்துறை மந்திரியாக உள்ள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியையும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.

  • 1 April 2025 9:36 AM IST

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லக்னோவில் இன்று நடைபெறும் 13-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸை எதிர்கொள்கிறது.

  • 1 April 2025 9:33 AM IST

    சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.43.50 குறைந்து ரூ.1,921.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த மாதம் வணிக சிலிண்டரின் விலை அதிகரித்திருந்த நிலையில், தற்போது குறைந்துள்ளது. கடந்த மாதத்தில் வணிக சிலிண்டர் ரூ.1,965க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • 1 April 2025 9:32 AM IST

    நீலகிரி, கொடைக்கானலில் புதிய கட்டுப்பாடுகளுடன் இ-பாஸ் நடைமுறை இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

    ஒவ்வொரு நாளும் விண்ணப்பிக்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது.

    எனினும், இந்த கட்டுப்பாடு நீலகிரி மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்ற அவசரகால வாகனங்களுக்கு இல்லை என்றும் இ-பாஸ் தேவையில்லை என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேபோல் கொடைக்கானலிலும் இந்த கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

1 More update

Next Story