இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 02-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 2 Dec 2025 3:43 PM IST
வெளிநாடு தப்பி ஓடிய 15 தொழிலதிபர்களால் ரூ.58,000 கோடி நிதி இழப்பு- மத்திய அரசு
இந்தியாவில் மோசடி செய்து வெளிநாடு தப்பி ஓடிய 15 தொழிலதிபர்களால் ரூ.58,000 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. விஜய் மல்லையா, நீரவ் மோடி, நிதின் ஜே சந்தேசரா, சேத்தன் ஜே சந்தேசரா, திப்தி சி சந்தேசரா, சுதர்சன் வெங்கட்ராமன், ராமானுஜம் சேஷரத்தினம் உள்ளிட்ட 15 பேர் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
- 2 Dec 2025 3:40 PM IST
மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 60 கி.மீ தொலைவில் நிலை கொண்டு, மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்கிறது. தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து இன்று மாலை வரை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே நீடிக்கும். கடற்கரையை நெருங்கும் போது, வலுவடையும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- 2 Dec 2025 3:39 PM IST
சாமி படங்களுக்கு இடையே மதுபான பாட்டில்கள் மறைத்து வைத்து விற்பனை
கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் சூழலில், குமரி மாவட்ட எல்லையில் உள்ள நெய்யாற்றின்கரை பகுதியில் வீட்டில் சாமி படங்களுக்கு இடையே மதுபான பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. சுமார் 30 லிட்டர் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பூசாரி அர்ஜுனன் கைது செய்யப்பட்டுள்ளார்
- 2 Dec 2025 3:36 PM IST
தீபமலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட மகாதீபக் கொப்பரை
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா நாளை நடைபெறவுள்ளதை ஒட்டி தீபமலை உச்சிக்கு அரோகரா கோஷத்துடன் கொண்டு செல்லப்பட்டது மகாதீபக்கொப்பரை.
- 2 Dec 2025 3:08 PM IST
சஞ்சார் சாதி கட்டாயமா? மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா விளக்கம்
மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது:- சஞ்சார் சாதி செயலி வேண்டாம் என்றால், அதை நீக்கி கொள்ளலாம். போனில் வைத்திருப்பதா வேண்டாமா என பயனர்களே முடிவு செய்யலாம். ஆக்டிவேட் செய்த பின்னரே செயல்படும். இந்த செயலியை அனைவருக்கும் அறிமுகப்படுத்துவது எங்கள் கடமை என்றார்.
- 2 Dec 2025 1:59 PM IST
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மாலை 4 மணி வரை கனமழை தொடரும் - வானிலை மையம் தகவல்
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மாலை 4 மணி வரை கனமழை தொடரும் என்றும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், ராமநாதபுரம், நாகை, கிருஷ்ணகிரி, வேலூர், ஈரோடு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- 2 Dec 2025 1:54 PM IST
சஞ்சார் சாதி ('Sanchar Saathi') கட்டாயமா? மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா விளக்கம்
அனைத்து போன்களிலும் Pre-Install கட்டாயம் என்ற உத்தரவுக்கு பின் மத்திய மந்திரி அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா விளக்கம் அளிக்கையில், “சஞ்சார் சாதி செயலி வேண்டாம் என்றால், அதை நீக்கி கொள்ளலாம். போனில் வைத்திருப்பதா வேண்டாமா என பயனர்களே முடிவு செய்யலாம். மேலும் பயனர் அதை ஆக்டிவேட் செய்த பின்னரே செயல்படும். இந்த செயலியை அனைவருக்கும் அறிமுகப்படுத்துவது எங்கள் கடமை” என்று தெரிவித்தார்.
- 2 Dec 2025 1:46 PM IST
கி.வீரமணியின் 93 ஆவது பிறந்தநாள்: நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 93 ஆவது பிறந்தநாளை ஒட்டி சென்னை அடையாற்றில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
- 2 Dec 2025 1:42 PM IST
ஒரு மணிநேரத்திற்குள் வாபஸ் பெறப்பட்ட ரெட் அலர்ட்
திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் ஒரு மணிநேரத்திற்குள் அதனை வாபஸ் பெற்று, ஆரஞ்சு அலர்ட்டாக சென்னை வானிலை ஆய்வு மையம். மாற்றி உள்ளது.
















