இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 05-02-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 5 Feb 2025 3:38 PM IST
ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
- 5 Feb 2025 3:28 PM IST
இந்தியாவை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள் 104 பேரை சுமந்து கொண்டு வந்த அமெரிக்க ராணுவ விமானம் ஒன்று அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இன்று மதியம் 1.55 மணியளவில் தரையிறங்கியது.
இதில், அரியானா மற்றும் குஜராத் மாநிலங்களை சேர்ந்த தலா 33 பேர், பஞ்சாப்பை சேர்ந்த 30 பேர், மராட்டியம் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களை சேர்ந்த தலா 3 பேர் மற்றும் சண்டிகாரை சேர்ந்த 2 பேர் நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.
- 5 Feb 2025 2:50 PM IST
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குச்சாவடி ஒன்றில் பெண்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
- 5 Feb 2025 2:28 PM IST
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - 3 ஆசிரியர்கள் கைது
கிருஷ்ணகிரி: 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஆறுமுகம், சின்னசாமி, பிரகாஷ் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாணவி ஒரு மாதமாக பள்ளிக்கு வராத நிலையில் கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்தது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், உறவினர்கள் நீதிகேட்டு பள்ளியை முற்றுகையிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 5 Feb 2025 2:21 PM IST
19 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை
ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரை அபராதத்துடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 16 மீனவர்கள் தலா ரூ 50,000 அபராதம் செலுத்தவேண்டும், தவறினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும். மீதமுள்ள 3 பேர் தலா ரூ.60.50 லட்சம் அபராதம் செலுத்தவேண்டும், தவறினால் ஓராண்டு சிறை விதிக்கப்படும் என்று இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
- 5 Feb 2025 2:16 PM IST
புதிய அறிவிப்புகளுடன் தயாராகிவரும் 2025-26-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்!
தேதி குறிப்பிடாமல் தமிழக சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக இம்மாதம் 3-வது வாரம் மீண்டும் கூட இருக்கிறது.
முதல் நாளில் பொது பட்ஜெட்டும், அடுத்த நாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் ஆகிறது. பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசும், வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்ய உள்ளனர்.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தலுக்கு முன்பு கடைசியாக தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் இதுதான். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டே தாக்கல் செய்யப்படும். எனவே, தற்போதைய பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது.
- 5 Feb 2025 1:24 PM IST
திருப்பரங்குன்றத்தில் நாளை மத நல்லிணக்க வழிபாடு - காங்கிரஸ் அறிவிப்பு
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “நாளை (பிப்.06) திருப்பரங்குன்றம் கோவிலிலும், சிக்கந்தர் பாதுஷா தர்க்காவிலும் வழிபாடு செய்ய உள்ளோம். தமிழ்நாடு அரசு திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மென்மையான போக்கை கடைபிடிக்கக் கூடாது
ஜனநாயகம்தான் எங்கள் கோட்பாடு, அதனை சீர்குலைக்க நினைப்பவர்களை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். பாஜக கவர்னர்களுக்கு சுப்ரீம்கோர்ட்டு எவ்வளவு அறிவுரை கூறினாலும் அவர்கள் திருந்துவதாக தெரியவில்லை.
இந்த தொகுதியின் எம்.எல்.ஏ., ஆக வேண்டும் என்று எல்லா குறுக்கு வழியும் கையாள்கிறார்கள். முருகனிடம் உங்கள் அரசியல் எடுபடாது” என்று அவர் தெரிவித்தார்.
- 5 Feb 2025 1:16 PM IST
அரோகரா கோஷம் முழங்க கொடியேற்றம்.. பழனி தைப்பூசத் திருவிழா தொடங்கியது
பழனி கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று காலை சிறப்பு பூஜையுடன் கொடியேற்றம் நடைபெற்றது. வேல், மயில், சேவல் உருவம் பொறித்த மஞ்சள் நிறக்கொடி ஆகியவை கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்தன.
அதன்பின்பு மங்கள வாத்தியங்கள், வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் தைப்பூச திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் "வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா" என கோஷம் எழுப்பினர்.
- 5 Feb 2025 1:13 PM IST
போராட்டம் நடத்தகூட கோர்ட்டு செல்லும் நிலைதான் எதிர்க்கட்சிகளுக்கு - வானதி சீனிவாசன் ஆவேசம்
கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், “தமிழக அரசை பற்றி விமர்சித்தால் பத்திரிக்கையாளர்கள் கூட தப்புவதில்லை. குண்டாஸ் போடும் அளவிற்கு அரசு உள்ளது. மோடியை விமர்சிக்காத ஊடகம் இல்லை. திருப்பரங்குன்றம் விவகாரத்தில்கூட கோர்ட்டு சென்று அனுமதி பெற்று தான் போராட்டம் நடத்த வேண்டிய நிலை தமிழக எதிர்க்கட்சிகளுக்கு உள்ளது.
திருப்பரங்குன்றம் என்றாலே முருகர் இருக்கும் இடம்... சிறுபான்மை மக்கள் வாக்குகளை வாங்குவதற்காக இரட்டை வேடம் போடுகிறீர்கள். கோர்ட்டுக்கு சென்று தான் அரசியலமைப்பு சட்டம் கொடுக்கும் உரிமை பெற வேண்டிய நிலை உள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது” என்று அவர் கூறினார்.
- 5 Feb 2025 1:11 PM IST
தமிழ்நாட்டில் கலவரத்தை தூண்ட முயலும் தீய சக்திகளை ஒடுக்குவோம்: அமைச்சர் ரகுபதி
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிலர் ஏதாவது கலவரத்தை தூண்ட முடியுமா என பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், நிச்சயம் அது தமிழ்நாட்டில் நடைபெறாது.
இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்களாக வாழுகின்ற மாநிலம் தமிழ்நாடு. இதை பெரிய விவகாரமாக்கி அதில் லாபமடைய வேண்டும் என்று நினைக்கின்றனர். கலவரத்தை தூண்ட முயலும் தீய சக்திகளை ஒடுக்குவோம்.
ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைபோல 2026 சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை” என்று அவர் கூறினார்.