பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு


தினத்தந்தி 5 April 2025 7:57 AM IST (Updated: 6 April 2025 8:03 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 5 April 2025 1:33 PM IST

    மீனவர்கள் பிரச்னை: இலங்கை அதிபரை சந்தித்த பின் பிரதமர் மோடி உரை

    இலங்கை அதிபர் அநுர திசாநாயக்க உடனான பேச்சுவார்த்தைக்குப் பின் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது பிரதமர் மோடி உரையாற்றுகையில், “மீனவர்கள் வாழ்வாதார பிரச்னை குறித்து பேசினோம். மனிதாபிமான அடிப்படையில் மீனவர்கள் பிரச்னையை அணுக இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளோம். கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திருப்பி அனுப்பவும் வலியுறுத்தியுள்ளோம்” என்று அவர் கூறினார். 

  • 5 April 2025 12:59 PM IST

    பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு

    இந்தியா மற்றும் இலங்கையின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், இரு நாடுகளின் பகிரப்பட்ட கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை மேம்படுத்தவும் பிரதமர் மோடி மேற்கொண்ட விதிவிலக்கான முயற்சிகளை கவுரவிக்கும் வகையில், இலங்கை அரசாங்கத்தால் பிரதமர் மோடிக்கு மதிப்புமிக்க ஸ்ரீலங்கா மித்ர விபூஷண பதக்கம் வழங்கப்பட்டது.

    வெளிநாட்டு சார்பில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 22வது சர்வதேச விருதாகும். உலகளாவிய நட்புகளை அங்கீகரிப்பதற்காக சிறப்பாக நிறுவப்பட்ட இந்த பதக்கம், இந்தியா-இலங்கை உறவுகளின் ஆழத்தையும் அரவணைப்பையும் பிரதிபலிக்கிறது.

    பதக்கத்தின் சிறப்பம்சங்கள்

    தர்ம சக்கரம் இரு நாடுகளின் கலாச்சார மரபுகளை வடிவமைத்த பகிரப்பட்ட பவுத்த பாரம்பரியத்தை குறிக்கிறது.

    அரிசி கதிர்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சடங்கு பானையான புன் கலசம், செழிப்பு மற்றும் புதுப்பித்தலை குறிக்கிறது.

    நவரத்தினம், அல்லது ஒன்பது விலைமதிப்பற்ற ரத்தினங்கள், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீடித்த நட்பைக் குறிக்கிறது, இது தூய தாமரை இதழ்களால் சூழப்பட்ட ஒரு பூகோளத்திற்குள் சித்தரிக்கப்பட்டுள்ளது.

    சூரியனும் சந்திரனும் இந்த உறவின் காலமற்ற தன்மையை மேலும் பிரதிபலிக்கின்றன, இது பண்டைய வரலாற்றிலிருந்து எல்லையற்ற எதிர்காலம் வரை நீண்டுள்ளது.

    இந்த விருது, பிரதமர் மோடியின் தொலைநோக்குத் தலைமைத்துவத்திற்கும், பிராந்திய ஒத்துழைப்பு, கலாச்சார மறுமலர்ச்சி மற்றும் ஆன்மீக ராஜதந்திரத்திற்கான அவரது உறுதியான அர்ப்பணிப்பிற்கும் ஒரு ஒளிரும் அஞ்சலியாக நிற்கிறது. பிராந்தியம் முழுவதும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் பகிரப்பட்ட முன்னேற்றத்தை வளர்ப்பதில் இந்தியாவின் முக்கிய பங்கை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

  • 5 April 2025 12:43 PM IST

    'எம்புரான்' பட தயாரிப்பாளரிடம் ரூ.1.5 கோடி பறிமுதல்

    எம்புரான் படத்தை தயாரித்த கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் நேற்று அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதன்படி அந்நிய செலவாணி முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை, கோழிக்கோடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்துடன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 5 April 2025 12:30 PM IST

    இந்தியா- இலங்கை இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

    கொழும்புவில் பிரதமர் மோடி மற்றும் இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் இந்தியாவும் இலங்கையும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டன.

    இதனைத்தொடர்ந்து இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இலங்கை முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டன.

    பிரதமர் மோடி மற்றும் இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க ஆகியோர் இணைந்து சம்பூர் சூரிய மின்சக்தி திட்டத்தை இணையவழியாக தொடங்கி வைத்தனர்.

  • 5 April 2025 12:04 PM IST

    ஜிப்லி புகைப்படங்கள் - நெல்லை போலீஸ் விடுத்த எச்சரிக்கை

    புகைப்படங்களை ஜிப்லியாக மாற்றும் போது எச்சரிக்கையுடன் இருக்க நெல்லை காவல்துறை அறிவுரை வழங்கி உள்ளது.

    AI தளங்களில் பதிவேற்றப்படும் புகைப்படங்களை சம்மந்தப்பட்டவரின் அனுமதி இல்லாமல் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனால் நம்பகமான AI தளங்களை மட்டுமே பயன்படுத்தி புகைப்படங்களை ஜிப்லியாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

  • 5 April 2025 11:24 AM IST

    'எல்2 எம்புரான்' பட இயக்குனர் பிருத்விராஜுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

    எம்புரான் படத்தின் இயக்குநரும், நடிகருமான பிருத்விராஜுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    கோல்டு, ஜன கன மன, கடுவா ஆகிய 3 திரைப்படங்களில் பிருத்விராஜ் இணை தயாரிப்பாளராக இருந்த நிலையில், கணக்கு விவரங்கள் தொடர்பாக நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணை தயாரிப்பாளராக இருந்தபோது ரூ.40 கோடி வருவாய் ஈட்டியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

  • 5 April 2025 11:13 AM IST

    இந்தியாவிலேயே மிக அதிக விகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது தமிழ்நாடு - மு.க.ஸ்டாலின் பெருமிதம்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

    9.69 சதவீத வளர்ச்சியுடன் தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக அதிக விகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது!

    அதுவும் பாலின சமத்துவம், அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான வளர்ச்சி என அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி இந்தச் சாதனையை நாம் எட்டியுள்ளோம் என்பதுதான் மிகவும் பாராட்டுக்குரியது.

    அடிப்படைகளில் உறுதி, நிலையான நிர்வாகம், தெளிவான தொலைநோக்கு ஆகியவற்றைக் கொண்டு நம் மாநிலம் மற்றும் மக்களின் எதிர்காலத்தை திராவிட மாடல் வடிவமைத்து வருகிறது.

    ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் எனும் நம் பேரிலக்கை நோக்கி வலிமையோடும் உறுதியோடும் விரைந்து கொண்டிருக்கிறோம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 5 April 2025 10:08 AM IST

    இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க உடன் பிரதமர் மோடி சந்திப்பு

    பிரதமர் மோடி 3 நாள் பயணமாக நேற்று இலங்கை சென்றடைந்தார். முன்னதாக பிரதமர் மோடி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நேற்று நடந்த ‘பிம்ஸ்டெக்’ மாநாட்டில் பங்கேற்றார். பின்னர் தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு விமானம் மூலம் இலங்கை புறப்பட்டார். தலைநகர் கொழும்பு விமான நிலையத்தில் இரவு தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இலங்கையின் மூத்த மந்திரிகள் அடங்கிய குழு ஒன்று பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்றது. அண்டை நாடான இலங்கையில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, அங்கே பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    இந்நிலையில் இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் அநுர குமார திசநாயக்கவை சந்தித்தார். கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்கவுடன், பிரதமர் மோடி பங்கேற்றார். இதனைத்தொடர்ந்து இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகாவுடன் பிரதமர் விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில் பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை விரிவாக்குவது குறித்து அவர்கள் விவாதிக்க உள்ளனர்.

    பேச்சுவார்த்தையின் முடிவில் இந்தியா-இலங்கை இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இரு நாடுகளுக்கு இடையே முதல் முறையாக ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிகிறது.

    இந்தியப்பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இலங்கையுடனான ராணுவ ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை சென்ற இந்திய அமைதிப்படையால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை இது பின்னுக்கு தள்ளிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இதைத்தவிர எரிசக்தி, இணைப்பு, டிஜிட்டல்மயமாக்கல், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளிலும் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை அதிகரிக்கவும் பிரதமர் மோடியின் பயணம் உதவும் என இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா கூறியுள்ளார்.

    பிரதமர் மோடியின் இந்த பயணத்தின்போது இலங்கையின் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களையும் அவர் சந்தித்து பேசுகிறார்.

    மேலும் இந்தியா உதவியுடன் இலங்கையில் நடந்துள்ள பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடியும், இலங்கை அதிபரும் இணைந்து தொடங்க வைக்கிறார்கள். மேலும் சோலார் திட்டம் ஒன்றுக்கும் இருவரும் இணைந்து அடிக்கல் நாட்டுகின்றனர்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரு தலைவர்களும் அனுராதபுரம் சென்று மகாபோதி கோவிலில் வழிபாடு செய்கின்றனர். அங்கும் இந்தியா உதவியில் நடந்த பணிகளை இருவரும் தொடங்கி வைக்க உள்ளனர்.

    பிரதமர் மோடி கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து இலங்கை செல்வது இது 4-வது முறையாகும். கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு அவர் இலங்கை சென்றிருந்தார்.

  • 5 April 2025 9:55 AM IST

    உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் பணியிட மாற்றம்

    சென்னை மண்டல உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    திருவள்ளூர் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் போஸ், சென்னை மண்டலத்தையும் கூடுதலாக கவனிப்பார் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

  • 5 April 2025 9:51 AM IST

    தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை சரிவு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.720 குறைந்து, ரூ.66,480க்கும், கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.8,310க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

1 More update

Next Story